272 நீதிபதிகளுக்கான பணியிடங்களை மாநில அரசு நிரப்ப வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்

சேலம்: “272 நீதிபதிகள் உட்பட 5,649 நீதிமன்ற ஊழியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க முதல் மாநாடு சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், அகில பாரத ஆதிவக்த பரிஷத் (ABAP) தலைவர் ராஜேந்திரன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுவாமிநாதன் பேசும்போது, ‘திறமையும் உழைப்பும் இருந்தால் வழக்கறிஞர் தொழிலில் வெற்றி பெறலாம். மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எவ்வாறு வாதம் செய்கின்றனர் என ஆராய்ந்து செயல்பட்டால் நிச்சயம் இளைய வழக்கறிஞர்கள் வெற்றி பெற முடியும்” என்றார்.

தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பேசியது: “வழக்கறிஞர்கள் தொழில் உன்னதமான தொழில். அதில் முறையாக செயலாற்ற வேண்டும். நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கை மாறிவிடக் கூடாது. அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த 13 ஆண்டு காலமாக செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும். நீதிமன்றங்களில் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் அதிக அளவில் வந்துள்ளதால், வழக்குகளை விரைந்து முடிக்க வசதிகள் வந்துள்ளது. இளைய வழக்கறிஞர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும்.

நீதிமன்றங்களில் 272 நீதிபதிகள் உட்பட 5649 நீதிமன்ற ஊழியர்களின் காலிப் பணியிடங்களை மாநில அரசு விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகப் பிரிவினை வழக்கில் கூட 15 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ள நிலை நீடித்து வருகிறது. எனவே, வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட வருடங்களாக இருக்கக் கூடிய வழக்குகளை விரைந்து முடிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் ஒரு முறை லோக் அதாலத் நடத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒவ்வொரு மாதமும் மாவட்டம்தோறும் சென்று, மாவட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து தேவையானவற்றை நிறைவேற்றிட வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனு, ஏழு ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்திடமே இருந்தது. உரிய நேரத்தில் முறையான பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்போது 7 பேருக்கும் விடுதலை கிடைத்துள்ளது” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.