பெங்களூரு ”நாட்டிலேயே முதல் முறையாக, ௮௦ வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் வீடுகளில் இருந்தே ஓட்டளிக்கும் வாய்ப்பு, கர்நாடகா சட்டசபை தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது,” என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
வாய்ப்பு
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக் காலம், மே ௨௪ல் முடிகிறது.
மாநிலத்தில், ௨௨௪ சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள், கடந்த மூன்று நாட்களாக கர்நாடகாவில் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று கூறியதாவது:
௮௦ வயதுக்கு மேற்பட்டோர், ஓட்டுச் சாவடிகளுக்கு வந்து ஓட்டளிப்பதை ஊக்குவிக்கிறோம். அதே நேரத்தில், சில குறிப்பிட்ட காரணங்களால் ஓட்டுச் சாவடிக்கு வர முடியாதவர்கள், வீட்டில் இருந்தே தபால் வாயிலாக ஓட்டு களை செலுத்தலாம்.
இதுபோல, மாற்று திறனாளிகளுக்கும் இந்த வாய்ப்பு தரப்படும்.
உடல் ஊனமுற்றோருக்கு, ‘சாக் ஷம்’ என்ற மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்படும். இதன் வாயிலாக அவர்கள் ஓட்டளிக்கலாம்.
வேட்பாளர்கள், தங்களுடைய வேட்பு மனு உள்ளிட்டவற்றை, ‘ஆன்லைன்’ வாயிலாக தாக்கல் செய்ய, ‘சுவிதா’ என்ற, மொபைல் போன் செயலியும் அறிமுகம் செய்யப்படுகிறது. பிரசார கூட்டங்களுக்கான அனுமதியையும் இதில் கோர முடியும்.
உங்களுடைய வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் என்ற பிரசார இயக்கத்தையும் நடத்த உள்ளோம்.
கிரிமினல் வழக்குகள் இருந்தபோதும், ஒரு குறிப்பிட்ட நபரை வேட்பாளராக தேர்வு செய்தது குறித்து, கட்சிகள் தங்களுடைய இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும்.
நடவடிக்கை
தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க, ‘இவிஜில்’ என்ற மொபைல்போன் ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் புகார் தெரிவித்த, ௧௦௦ நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகாவில், ௨.௫௯ கோடி பெண்கள் உட்பட, ௫.௨௧ கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ௯.௧௭ லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள்.
மாநிலத்தில், ௧௨.௧௫ லட்சம் வாக்காளர்கள், ௮௦ வயதுக்கு மேற்பட்டோர். இதைத் தவிர, ௫.௫௫ லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்