அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாஷிங்டனில் வெள்ளை மாளிகை உள்ளது. அதன் அருகே ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அலுவலகத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த ஒலியைக் கேட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடி பிறகுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து ஏர்கண்டிஷனரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தால் வெள்ளை மாளிகை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.