நேற்றைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் இன்றைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் நாளைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் வேறு வேறு என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்தானே? பணத்தின் மதிப்பை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது பணவீக்க விகிதம் (Inflation) ஆகும்.

முதலீடு லாபத்தை விழுங்கும் பணவீக்கம்..!
இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளில் பணவீக்கம் ஆண்டுக்கு சராசரியாக 7 சதவிகிதமாக இருந்து வந்துள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 6 சதவிகிதமாக இருக்கிறது. நாட்டில் பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்பிஐ) வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சுமார் 7 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடனுக்கான வட்டி 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வு..
பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது, கடன் மற்றும் டெபாசிட்-க்கான வட்டி உயரும். பணவீக்க அளவுக்குதான் ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி) வருமானம் இருப்பதால் இந்த முதலீடுகளால் பெரிதும் லாபம் இருக்காது.
அந்த வகையில் இந்த வருமானம், பணவீக்க விகிதத்தை தாண்டி லாபகரமாக இல்லை. பொதுவாக, எந்த ஒரு முதலீடாக இருந்தாலும், அதன் வருமானம் பணவீக்க விகிதத்தை விட சுமார் 4 முதல் 5% அதிகமாக இருந்தால்தான் அது லாபகரமான முதலீடாக இருக்கும். பணவீக்கம் என்பது வேறு ஒன்றும் இல்லை. மிக எளிமையாக சொல்வது என்றால் விலைவாசி உயர்வுதான்.

உதாணத்துக்கு, ஒரு பொருளின் விலை இந்த ஆண்டு 100 ரூபாயாக இருக்கிறது. அடுத்த ஆண்டு அது 10% விலை உயர்ந்து 110 ரூபாயாக உயர்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் செய்திருக்கும் முதலீட்டுக்கு 8% வருமானம் கிடைத்து, அது 108 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றால், அந்த குறிப்பிட்ட பொருளை ஓராண்டு கழித்து உங்கள் முதலீட்டின் மூலம் வாங்க முடியாது. இரண்டு ரூபாய் கடன் வாங்கிதான் வாங்க வேண்டும். இப்போது, முதலீடு மூலமான வருமானம் பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் ஏன் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
பணத்தின் மதிப்பு எப்போது பாதியாக குறையும்?
ஒருவர் பீரோவில் அல்லது வீட்டில் பாதுகாப்பாக யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு பாதியாக எப்போது குறையும் என்பதை கணக்கிட ஒரு பார்முலா இருக்கிறது. அதாவது, பணவீக்க விகிதத்தால் 70 -ஐ வகுக்க கிடைக்கும் எண் ஆனது, இன்னும் எத்தனை ஆண்டுகளில் பணத்தின் மதிப்பை குறைக்கும் என்பதை காட்டுகிறது.

பணவீக்க விகிதம்…
பணத்தின் மதிப்பு பாதியாக குறைய எடுத்துகொள்ளும் ஆண்டுகள் = 70 / சராசரி பணவீக்க விகிதம்
உதாரணமாக, தற்போதைய பணவீக்க மதிப்பு 7% என வைத்துக்கொள்வோம். பணத்தின் மதிப்பு, (70/7=) 10 ஆண்டுகளில் பாதியாக குறையும். பணவீக்க விகிதம் 7 சதவிகிதம் என்கிற நிலையில் ஒருவரிடம் ரூ.1 லட்சம் இருந்தால் அவர் எதிலும் முதலீடு செய்யவில்லை என்றால் அதன் மதிப்பு 10 ஆண்டுகளில் ரூ.50,000 ஆக குறைந்துவிடும்.
இதுவே பணவீக்க விகிதம் 10% என்றால், 70/10 = 7 ஆண்டுகளில் பணத்தை எதிலும் முதலீடு செய்யாமல் வைத்திருந்தால் பாதியாக குறைந்துவிடும். ரூ.1 லட்சத்தை பீரோவில் பூட்டி வைத்திருந்தால் பணத்தின் மதிப்பு ஏழு ஆண்டுகளில் ரூ.50,000 ஆக பாதியாக குறைந்துவிடும்.
பணவீக்க விகிதம் 5% என்றால், 70/5 = 14 ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு பாதியாக குறைந்துவிடும். ரூ. 1 லட்சத்தின் மதிப்பு 14 ஆண்டுகளில் ரூ.50,000 ஆக குறைந்துவிடும்.
முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டி வளர்கிறதா?
இந்தக் கணக்கீடு நம்முடைய முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டி வளர்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு உதவும். அதனால், பணத்தை சும்மா வைத்திருப்பது இழப்பாகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். காலப்போக்கில் பொருள்களின் விலை மற்றும் சேவை கட்டணம் அதிகரிக்கும்போது, பணத்தின் மதிப்பு, குறைந்து கொண்டே செல்கிறது. வேறு விதமாகச் சொல்வது என்றால், பணத்தின் மூலமாக ‘வாங்கும் சக்தி’ குறைகிறது.
குடும்ப நிதித் திட்டமிடலில் பண வீக்கத்தினால் ஏற்படப்போகும் விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். விவரம் தெரிந்த முதலீட்டாளர்கள் பணவீக்கத்தை கண்டு பயப்படுகிறார்கள். காரணம், அது அவர்களின் முதலீட்டின் மீதான மதிப்பைக் குறைத்துவிடுவது அவர்களுக்கு தெரிந்திருப்பாகும்.

பணத்தை சும்மா வைத்திருக்க கூடாது…
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பருப்பு வடை விலை ரூ.5. இப்போது விலை ரூ.10, வடை அளவில் கூட வில்லை.. அதே தரம், அதே எடைதான்.. எதனால் இந்த விலை அதிகரித்துள்ளது தெரியுமா? பணவீக்கமே காரணமாகும். பணவீக்கம் பொருள்களின் விலையைப் பாதிக்கும் காரணத்தால் இந்த விலை உயர்வு நடந்துள்ளது.

நிறுவனர்,
www.gururamfinancialservices.com
பணத்தின் மதிப்பு குறைவதைத் தவிர்க்க, பணவீக்க விகிதத்துக்குச் சமமான அல்லது அதை விட அதிக விகிதத்தில் வருமானம் கிடைக்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீட்டுத் திட்டங்கள் பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
அனைவருக்கும் சில, பல வருடங்கள் கழித்து நிறைவேற்ற வேண்டிய நிதி இலக்குகள் இருக்கும். அப்படி இருக்க நீங்கள் இன்று சேமித்து வைக்கும் பணமானது, உங்களின் எதிர்கால கனவுகளை நிறைவேற்ற போதுமானதாக இருக்குமா என்பதை கவனிக்க வேண்டும். இந்த 70 விதிமுறையானது உங்களது கனவுகளை நிறைவேற்ற நீங்கள் சேமிக்கும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்குமா எனபதைப் பற்றி அறிந்துக்கொள்ள உதவும். எனவே, பணவீக்க விகித பாதிப்பிலிருந்து தப்பிக்க பணத்தை சும்மா வைத்திருக்க கூடாது; அதனை கட்டாயம் முதலீடு செய்தே ஆக வேண்டும்.
-அடுத்து முதலீட்டின் வருமானத்தை குறைக்கும் சட்டப்படியான ஒரு விஷயத்தை பார்ப்போம்.