ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதியதலைமைச் செயலக கட்டிடம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில அரசு ரூ. 650 கோடி செலவில் அதன் தலைநகர் ஹைதராபாத்தில் மிகபிரம்மாண்டமாக தலைமைச் செயலகத்தை கட்டியுள்ளது. ஹைதராபாத் ஹுசைன் சாகர் ஏரி அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக புதிய தலைமைச் செயலகம் உருவாகியுள்ளது.
புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கு சட்ட மாமேதை அம்பேத்கரின் பெயரை அம்மாநில அரசு சூட்டியுள்ளது. முன்னதாக, இக்கட்டிடத்தின் திறப்பு விழா கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள தமிழகம், டெல்லி, கேரளா, பஞ்சாப், உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனிடையே, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மேலவை தேர்தல்கள், உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்காரணமாக தலைமைச் செயலக திறப்பு விழா நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடபணிகளை அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஏப்ரல் மாதம் 30-ம் தேதி புதிய தலைமைச் செயலக கட்டிடம் திறப்பு விழா நடைபெறும். தெலங்கானா மாநிலத்திற்காக போராடி உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும்” என்றார்.
அம்பேத்கர் சிலை: ஹைதராபாத்தில் ஐ-மேக்ஸ் திரையரங்கம் அருகே வெகுபிரம்மாண்டமாக அமைக்கப்பட் டுள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை வரும் ஏப்ரல் 14-ம் தேதி நடத்த தெலங்கானா மாநில அமைச்சர்கள் குழு தீர்மானித்துள்ளது. இந்த விழாவில் தெலங்கானா மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.