சாப்பிட போன ஓட்டலில் சிறுவனை கடித்த எலி

ஐதராபாத்:  ஐதராபாத்தில் துரித உணவகத்தில் 8வயது சிறுவனை எலி கடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கோம்பள்ளியில் உள்ள பிரபல துரித உணவகத்தில் கடந்த 8ம் தேதி 8வயது சிறுவன் தனது பெற்றோருடன் உணவருந்திக்கொண்டு இருந்தான். அப்போது அங்குள்ள கழிவறையில் இருந்து ஓடிவந்த எலி ஒன்று சிறுவனின் மீது ஏறியது. அதனை தள்ளிவிட முயன்றபோது சிறுவனை அந்த எலி கடித்தது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு காயங்கள் குணமடைய ஊசிபோடப்பட்டது. சிறுவனை எலி கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து இருந்தார். மேலும் தனது மகனை எலி கடித்தது குறித்து 9ம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட துரித உணவகத்தின் நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துரித உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.