டெல்லியின் பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சிறு வயதில் தான் தன்னுடைய தந்தையால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி பெண்கள் ஆணையத்தின், சர்வதேச பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சுவாதி, “நான் நான்காம் வகுப்பு படிக்கும் வரை, என்னுடைய தந்தையால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். அப்படி தொந்தரவுக்கு ஆளாகும்போது, நான் கட்டிலின் அடியில் தப்பித்து ஒளிந்துகொள்வேன்.

அந்த சமயத்தில் இப்படிப்பட்ட ஆண்களுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவது, எப்படி பெண்கள், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது குறித்து யோசிப்பேன்.
என்னுடைய தந்தை என் முடியைப் பிடித்து, சுவரில் அடித்து, ரத்தம் வரும் வரை காயப்படுத்துவார். என்னுடைய தாயாரும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தார். என்னைக் காப்பாற்ற பெரிதும் முயன்றார் என்னுடைய தாயார்.
ஒரு கட்டத்தில் துயரங்களைத் தாங்கிக்கொள்ள இயலாத நிலையில், தந்தையை விட்டுப் பிரிந்தார். அப்போதுதான், மகிழ்ச்சி ஏற்பட்டு என்னுடைய வாழ்க்கை மாறியது. இத்தனை வருடங்கள் கடந்த பின்னரும், அதன் ரணங்கள் வடுவாக எப்போதும் இருக்கிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தொண்ணூறு பெண்களுக்கு விருது வழங்கியது என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களும் தங்களின் இளம்வயதில், இது மாதிரியான சிக்கல்களைச் சந்தித்திருக்கக் கூடும். எனவே, என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள்… இது குறித்துப் பேசுவது முக்கியமானது என்று நினைக்கிறேன்.

இதுபோன்ற சம்பவங்கள் தரும் கோபம் சரியான முறையில் கையாளப்பட்டால், அது மற்றவர்களின் வலியைப் புரிந்துகொள்ளவும், அதற்காகக் குரல் கொடுக்கவும் உதவும்” என்றார்.
சமீபத்தில், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பு, தன்னுடைய தந்தையால் பாதிக்கப்பட்டது குறித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.