“செந்தில் பாலாஜி `டார்கெட்' அமைச்சர்!" – கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நேற்று (11-03-2023) நடைபெற்ற கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் .

அப்போது பேசிய அவர், “கைத்தறி ஆடைகளை அனைவரும் வாங்க வேண்டும்; அவற்றை அணிய வேண்டும் என்பதை இயக்கமாக உருவாக்கிய கழகம் தி.மு.க-தான். கைத்தறி மக்களின் துயர்நீக்க,1950-களில் கைத்தறி ஆடைகளை அண்ணாவும், கலைஞரும் விற்றனர். 1953-ம் ஆண்டு ஜனவரி 4-ம் நாள் தி.மு.க-வானது முதன் முதலாக கைத்தறி ஆதரவு நாள் கொண்டாடியது.

முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.

சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் இது கலைஞரின் முழக்கம். சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்… இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய முழக்கம். ஈரோடு கிழக்கு வெற்றியானது, மக்களுக்கு அரசின்மீது இருக்கும் மகத்தான நம்பிக்கையைக் காட்டுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட விரும்புகிறேன். எப்போதும் ஏதேனும் திட்டமிட்டு செயல்படுபவர் செந்தில் பாலாஜி. அதனால்தான், நான் அடிக்கடி அவரை `டார்கெட் அமைச்சர்’ என்று சொல்வேன். தனக்கான ஒரு டார்கெட்டை உருவாக்கி அதனை அடைந்து காட்டுவார்.

சிலர் வதந்திகள் மூலமாக ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். அத்தகைய வதந்திகள் எழுந்த வேகத்திலே அமுக்கப்பட்டு விடுகின்றன. என்னுடைய பொது வாழ்க்கையில் எத்தனையோ பூச்சாண்டிகளைப் பார்த்திருக்கிறேன். முத்துவேல் கருணாநிதியின் மகன் நான். இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்” என்றார்.

தொடர்ந்து, நெசவுத் தொழில் சார்ந்து உடுமலை நாராயண கவி எழுதிய, `சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி’ என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் பாடினார்.

இந்த விழாவில் பேசிய கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, “முதல்வர் தூங்குவதில்லை; அவர் ஒவ்வொரு நாளும் தூங்காமல் விழித்துக் கொண்டே, ஒவ்வொரு திட்டமாக அளித்து வருகிறார். `மேற்கு மண்டலம் எங்கள் சொத்து’ என்று கூறுபவர்களுக்கு நிரந்தர முடிவுரையை ஈரோடு கிழக்கு மக்கள் எழுதியிருக்கிறார்கள். தி.மு.க என்றால் செயல்; முதல்வர் என்றால் உழைப்பு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.