சென்னை பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி-பத்மாவதி தம்பதியினர். இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர்போல் பாவித்து விழாவிற்கு அழைப்பு விடுத்து இருந்தார். அழைப்பை ஏற்று 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சகோதரத்துவ எண்ணத்துடன் கையில் சீர்வரிசையுடன் வந்து விழா பெண்ணிற்கு நலங்கு வைத்து அசத்தினர்.
இந்நிகழ்வு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து உறவினர்கள்போல் அவர்கள் பெண்ணிற்கு மலர் தூவி ஆசீர்வாதம் வழங்கியும் அன்பை பரிமாறினர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில் வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் பாவித்து அவர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்ட நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பீகாரில் இருக்கும் பாஜக தலைவர்கள் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்பினர்.
அதற்காக வேறு மாநிலங்களை அரங்கேறிய குற்றச்சம்பவங்களை தமிழ்நாட்டில் நடப்பதாக கேப்சனிட்டு வீடியோவும் வெளியிட்டனர். இதனை பிரபல செய்தி நிறுவனங்களை உண்மை தன்மையை ஆராயாமல் பொய் செய்தியை வெளியிட்டனர். தமிழக அரசும், பீகார் மாநில அரசும் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த வதந்திகள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.