திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 97.71 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்கள் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ஆண் பயணி ஒருவர் மடிக்கணினியில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் இருந்த 494 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து விமான நிலைய கழிவரையிலிருந்து ஒரு தங்கக் கட்டி, 3 தங்க சங்கிலி என 1.266 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 97 லட்சத்து 71,520 ரூபாய் ஆகும். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.