“மன்மோகன் சிங் சிறந்த பிரதமராக அறியப்படுவார்!’’ – ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன்!

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜனின் சுயசரிதை புத்தகம் `ஃபோர்க்ஸ் இன் தி ரோட் : மை டேஸ் அட் ஆர்.பி.ஐ அண்ட் பியாண்ட் (Forks in the Road: My Days at RBI and Beyond)’ சில மாதங்களுக்கு வெளியானது. ரிசர்வ் வங்கியில் அவர் பணி செய்த நாள்கள், முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோருடனான தொடர்பு, பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா எப்படி மீண்டெழுந்து 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்வது என பல விஷயங்கள் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகம் பற்றி அவர் சொல்கிறார் என்று பார்க்கும்முன் அவரை பற்றி ஒரு சிறு குறிப்பு.

Forks in the Road

ஐ.ஐ.எம்-அகமதாபாத்தில் பேராசிரியராக இருந்தவர், டெல்லியிலிருக்கும் ஆர்.பி.ஐ வளாகத்துக்கு 1981 ஆம் ஆண்டு வந்தார். ரங்கராஜன் ஆர்.பி.ஐ கவர்னராக 1992-ஆம் ஆண்டிலிருந்து 1997-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இது சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டம். மேலும், இவர் 12-ஆவது நிதிக் குழுவின் சேர்மனாகவும், பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சேர்மனாகவும், திட்டக் குழுவின் உறுப்பினராகவும், ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இனி அவர் எழுதிய புத்தகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

வரலாற்றில் இடம்பெறுவார் மன்மோகன் சிங்…

‘‘மன்மோகன் சிங் நிதி மந்திரியாக இருந்தபோது பொருளாதாரக் கொள்கை மீது இந்தியா கொண்டிருந்த அணுகுமுறையில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவர் முன்னெடுத்த சீர்த்திருத்தம் ஒரு புதிய பாதைக்கு வழிவிட்டது. 2005-06 முதல் 2010-11 வரையிலான காலகட்டம் இந்தியப் பொருளாதாரத்தின் சிறப்பான காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியானது சுமார் 8.8% அளவுக்கு வளர்ச்சி அடைந்தது.

மன்மோகன் சிங்

தொடர்ந்து ஐந்தாறு வருடங்கள் இந்த அளவுக்கான வளர்ச்சி இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் உலகளவில் நெருக்கடி ஏற்பட்ட 2008-09 ஆம் ஆண்டும் அடங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2007-08-ஆம் ஆண்டில் முதலீடானது உள்நாட்டு உற்பத்தியில் 39.1 சதவிகிதத்தை எட்டியது. நிலுவைத் தொகையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. இந்தியாவின் வளர்ச்சி 2011-12 ஆண்டுக்குப் பிறகு குறைய ஆரம்பித்தது உண்மைதான். ஓரளவுக்கு இது சுழற்சி ஆகும். ஆனால் இதை இன்னும் சிறப்பாக நிர்வகித்திருக்கலாம். இவருக்கிருந்த துணிச்சலும், தொலைநோக்குப் பார்வையும் இந்தியாவுக்காக பல வாய்ப்புகளைத் திறந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இவர் உண்மையிலேயே வரலாற்றின் பக்கங்களில் ஒரு சிறந்த பிரதமர் என இடம்பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

நரசிம்ம ராவ் – தயக்கம் காட்டாத சீர்திருத்தவாதி….

இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டபோது நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். அவர் சீர்திருத்தங்களுக்கு அரசியல் ரீதியாக ஆதரவையும் பாதுகாப்பையும் கொடுத்தார். அவர் தயக்கம் காட்டாத சீர்திருத்தவாதி ஏனெனில், அவர் பிரதமராக மட்டுமில்லாமல் தொழில்துறை மந்திரியாகவும் இருந்தார்.

நரசிம்ம ராவ்

சிக்கல் மிகுந்த கட்டுப்பாடுகள் உற்பத்தித் துறையில் ஊடுருவியிருந்ததை சரிசெய்ய பல முன்னெடுப்புகளைச் செய்தார். சீர்திருத்தங்களில் இது முக்கியமான ஓர் அம்சமாகும். எட்டாவது ஐந்தாண்டு திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த சீர்திருத்தங்களின் இயல்பையும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே செயல்படுத்த அனுமதியளித்தார். அவர் சீர்திருத்தம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை ஏனெனில் அவர் காங்கிரஸ் கட்சியையும் தன்னோடு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

1991-ஆம் ஆண்டு நடந்த சீர்திருத்தம்…

‘‘1955-56-ஆம் ஆண்டுக்கும் 1980-81-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் இந்தியா ஐ.எம்.எஃப்-ஐ தன்னுடைய நிலுவைத் தொகைப் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அணுகியது. ஆனால் அதற்கு ஐ.எம்.எஃப் அளித்த ஆதரவு ஓரளவுக்குத்தான் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. 1966-ஆம் ஆண்டு நாம் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு விரும்பிய பலனைக் கொடுக்கவில்லை. ஏனெனில், போதுமான அளவு நிதி வழங்கத் தவறியதாகும். இதை நான் இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.

ஐ.எம்.எஃப்

1980-81-ஆம் ஆண்டு ஐ.எம்.எஃப்-உடன் ஆன திட்டம் வெற்றிகரமான ஒன்றாகும். ஏனெனில், நிலுவைத் தொகைப் பிரச்னைக்கு அது முழுமையாக உதவியது. ஆனால் நாம் அது அனுமதித்த நிதி முழுவதையும் பயன்படுத்துவதற்கான தேவை இருக்கவில்லை. 1991 ஆம் ஆண்டு ஐஎம்எஃபுடன் ஆன திட்டத்தில் பல சீர்திருத்த நிலைகளைத் தொடர்ந்து பின்பற்றியதால் முற்றிலும் வித்தியாசமான தாக்கம் ஏற்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய காலகட்டங்களில் அடிப்படை உத்தியை மாற்ற விரும்பவில்லை.’’

ரிசர்வ் வங்கியின் வேலையை விட்டுவிடலாமா?

‘‘மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்ட எனக்கு ஆரம்பத்தில் மிகவும் குறைவான, வரையறுக்கப்பட்ட வேலைகளே கொடுக்கப்பட்டதால் அவ்வளவு பிடித்தமில்லாமல் இருந்தது.

ரிசர்வ் வங்கி

இருப்பினும், ஆறு மாதங்களில் சூழ்நிலை மாற ஆரம்பித்தது. நான் விருப்பப்பட்ட வேலைகள் எனக்கு ஒதுக்கப்பட்டன. அதனால் கொள்கைகளை வடிவமைப்பதில் என்னால் திறம்பட பணியாற்ற முடிந்தது.’’

மோடியின் டார்கெட் 5 ட்ரில்லியன் டாலர்…

‘‘ஐந்து வருடங்களில் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்கிற நிலையை அடைய வேண்டுமெனில் ஆண்டு வளர்ச்சி சுமார் 8% – 9% இருக்க வேண்டும்.

நரேந்திர மோடி

முன்பே சொன்னது போல வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்தி முதலீடாகும். பொதுத்துறை முதலீடு அதிகரிக்கும் அதே நேரத்தில் தனியார்துறை முதலீடும் அதிகரிக்க வேண்டும். தற்சமயம், மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation) உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவிகிதமாக இருக்கிறது. இது 33 சதவீதமாக உயரும்பட்சத்தில் வளர்ச்சி விகிதம் 7% முதல் 8% உயரும். எனவே, முதலீட்டு சதவீதத்தை முடுக்குவதுதான் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.