மயிலாடும்பாறை அருகே மந்திச்சுனையில் இடிந்த பள்ளி கட்டிடம் ஆய்வு

வருசநாடு, ஜன. 13: கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் புதிய கட்டிடம் கட்டாமல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.40 லட்சம் செலவில் பள்ளி கட்டிடத்தில் புதிய வர்ணம்பூசும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளியில் உள்ள பழமையான வகுப்பறை கட்டிடத்தில் தலைமை ஆசிரியர் மரகதம் குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளியின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு இடிந்து தலைமை ஆசிரியரின் மேஜை மற்றும் இருக்கை மீது விழுந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் பள்ளிக்குழந்தைகள் அலறியபடி வகுப்பறை கட்டிடத்தை விட்டு வெளியே ஓடினர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர்களை அந்த கட்டிடத்தில் இருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதில் தலைமை ஆசிரியர் மற்றும் குழந்தைகள் அதிஷ்டவசமாக காயங்கள் இன்றி தப்பினர். பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபானி, மாவட்ட செயற் பொறியளர் முருகன், கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து, ஐயப்பன், மந்திச்சுனை மூலக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புதிய கட்டிடம் கட்டும் வரை குழந்தைகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடத்தில் அமர வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறுகையில்:
கடமலை- மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடங்களை இடிக்காமல் வைத்துள்ளனர் பள்ளி குழந்தைகள் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பெற்றோர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.