பருவநிலை மாற்றம் மரங்களின் தேவையையும், மரம் நடுவதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்தி வருகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் சாலையின் இருப்பக்கங்களிலும் ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களின் நிழல்களுக்கு இடையே நாம் பயணித்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே குளிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?
இன்னும் கொஞ்சம் இறங்கி இந்த மரங்களின் அருகில் போய் பார்த்தால் அதன் பட்டையில் பல ஆணிகளையும், பலரது கிறுக்கல்கள் அல்லது சரித்திரங்களையும், விளம்பர பலகைகளையும் காணலாம். இவையே அந்த மரத்திற்கு எமனாக மாறலாம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். இதுகுறித்து பெங்களூரில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி சுந்தர்ராஜ் அவர்களிடம் பேசியபோது,
“இன்றைய காலக்கட்டத்தில் நாம் மரங்களுக்கும் உயிர் உள்ளது என்பதை மறந்து அதை ஒரு சுவரைப்போல பயன்படுத்தி வருகிறோம். மரங்களுக்கு அதன் அடிப்பகுதிதான் முக்கியமானது. இந்த பகுதியில் நாம் ஏதாவது எண் அல்லது குறியீடு ஆகியவற்றை குறிக்க மரத்தின் பட்டையை நீக்கி குறியிடுகிறோம்.
இப்படி ஒவ்வொரு தடவையும் பட்டையை நீக்கிக்கொண்டே வரும்போது அந்த இடத்தில் ஒரு ஓட்டை உருவாகிவிடுகிறது. அடுத்ததாகவும் விளம்பரப் பதாகைகளுக்கு மரத்தில் ஆணி அடிக்கிறோம். இந்த இடங்களில் உருவாகும் ஓட்டைகளில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் குடியேறி மெள்ள மெள்ள மரத்தின் பலத்தை குறைத்து விடுகிறது.
இந்நிலையில் மழை பெய்தாலோ அல்லது புயல் அடித்தாலோ மரம் அடியோடு விழுந்து விடுகிறது. ஆனால் நாமோ மரம் விழுந்தது நம்மால் தான் என்பதைக்கூட உணராமல் மழையால் விழுந்தது, புயலால் சாய்ந்தது என்று கூறிவருகிறோம். இதனால் மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
மனிதனின் உள்ளுறுப்புகளை எப்படி தோள் காக்கிறதோ அப்படிதான் மரத்தையும் அதன் பட்டைகள் காத்து வருகின்றன. இந்த பட்டைகள் காயம்படாத வரைக்கும் மரத்தினுள் கிருமியோ, பூச்சிகளோ போக துளிக்கூட வாய்ப்புகள் இல்லை. ஆனால் பட்டையில் காயம்படும்போது மரத்தினால் அதை குணப்படுத்த முடியாது.
அதனால்தான் நாம் மரத்தை காயப்படுத்தும்போது அவை அழிகின்றன. பூச்சியினாலோ, நோயினாலோ மரங்கள் விழுகின்றன என்பதற்கு மிக மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன. ஆனால் மனிதர்களால்தான் அதிகமாக மரத்தில் நுண்ணுயிரிகள் தாக்கி ஆண்டுக்கணக்காக வாழவேண்டியவைகள் அப்போதே மடிகின்றன.
அதற்காக இன்று ஒரு மரத்தை காயப்படுத்தினால் அது இன்றே விழுந்துவிடும் என்று நினைக்காதீர்கள். வருடங்கள் செல்ல செல்ல மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாகி கீழே விழுந்துவிடும். தற்போது ‘காலநிலை மாற்றம்’ பற்றி பெரிதாக பேசப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே மரங்களை அழிப்பதுதான்.

இவற்றையெல்லாம் தடுக்க நாம் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். ‘மரங்களுக்கும் உயிர் உள்ளது’ என்று நினைத்தாலே போதுமானது. நமது முன்னோர்கள் மரம் இருந்தால் தான் மனிதன் வாழுவான் என்று எண்ணியதால் தான் அவர்கள் நிறைய மரங்களை வளர்த்தார்கள். அந்த மரங்களை நாம் காப்பது மிக மிக முக்கியம். அத்துடன் நாமும் முன்னோர்களை பின்பற்றி மரங்களை நட வேண்டும். மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும். ஒரு மரம் தன் வாழ்நாளில் எவ்வளவோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. நிழலை தருகிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை தடுக்க ஆணி அடிப்பதை மக்களாகிய நாம் தடுக்க வேண்டும்” என்று கூறினார்.