வழக்கறிஞர் கொலை வழக்கு; அரிவாளால் தாக்கிய குற்றவாளி; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நகை அடகுக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி,  பிற்பகலில் அவர் நடத்திவந்த அடகுக்கடையினுள் அமர்ந்திருந்தார். அப்போது மூன்று பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாகத் தாக்கியது. அந்தக் கும்பலின் தாக்குதலிலிருந்து தப்பித்துச் செல்ல கடையைவிட்டு வெளியே ஓட முயன்றார் முத்துக்குமார். இருப்பினும் அந்தக் கும்பல் அவரை ஓட, ஓட வெட்டிக் கொலைசெய்தது.

கொலைசெய்யப்பட்ட முத்துக்குமார்

அரிவாள் வெட்டு, கத்திக் குத்து ஆழமாக விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்திப்பழம். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ராஜேஷ், வழக்கறிஞர் முத்துக்குமார் குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதையடுத்து, 2019-ம் ஆண்டு முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அருகே வைத்து படுகொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ராஜேஷ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், முத்துக்குமார் முதல் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். அத்துடன், சிவக்குமாரின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ், நீதிமன்றத்தில் பலமுறை ஜாமீன் பெற முயன்றிருக்கிறார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தில் அவரது ஜாமீனுக்கு எதிராக முத்துக்குமார் மனு அளித்து ஜாமீனுக்குத் தடையாக இருந்துவந்திருக்கிறார்.

சுட்டுப் பிடிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ்

சமீபத்தில் ஜாமீன் பெற முயன்றபோது, அதற்கும் முத்துக்குமார் தடையாக இருந்திருக்கிறார். தனக்கு ஜாமீன் கிடைக்காத ஆத்திரத்தில் ராஜேஷின் தரப்பினர் கொலைசெய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஐந்து குற்றவாளிகள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், 2 பேரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான ஜெயபிரகாஷை போலீஸார் தேடி வந்தனர்.

ஜெயபிரகாஷ், தூத்துக்குடி தட்டப்பாறை காவல் நிலையத்துக்குட்பட்ட மறவன்மடம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை எஸ்.ஐ ராஜ பிரபு, சுடலைமணி உள்ளிட்ட போலீஸார் ஜெயபிரகாஷைப் பிடிக்க முயன்றிருக்கின்றனர். அப்போது ஜெயபிரகாஷ், போலீஸார் இருவரையும் அரிவாளால் தாக்கியிருக்கிறார். இதனையடுத்து  ஜெயபிரகாஷை துப்பாக்கியால் சுட்டனர் போலீஸார். இதில், முழங்காலுக்கு கீழே காயமடைந்த ஜெயபிரகாஷ், கீழே விழுந்திருக்கிறார்.

சிகிச்சை பெற்று வரும் போலீஸார்

இதைத் தொடர்ந்து, ஜெயபிரகாஷைக் கைதுசெய்த போலீஸார், உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தில் அரிவாள் வெட்டு விழுந்த எஸ்.ஐ ராஜபிரபு, காவலர் சுடலைமணி ஆகியோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.