இன்று உலகத்தையே கைக்குள் அடக்குமளவு அறிவியல், தகவல் தொழில் நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. விண்ணில் நிலைநிறுத்தும் செயற்கைகோள் மூலம் பூமியின் செயல்பாடுகளை கண்காணித்து பூகம்பம், புயல், சுனாமி போன்ற பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து அவற்றை முற்றிலும் தடுக்க முடியா விட்டாலும் கூட அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
விண்வெளியில் சாதனை படைத்து வரும் நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா பட்டியலில் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., போன்ற ராக்கெட்கள் மூலம் பல செயற்கைகோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் எஸ்.எஸ்.எல்.வி., (ஸ்மால் சேடிலைட் லாஞ்ச் வெகிள்)- டி 2 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ செலுத்தியது. இந்த ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.,07, அமெரிக்காவின் ஜானஸ், சென்னை ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்பின் ஆசாதிசாட்-2 ஆகிய செயற்கைகோள்களை விண்ணில் கொண்டு சென்று சரியான இடத்தில் நிலைநிறுத்தியது. மார்ச் இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 மூலம் வெளிநாட்டின் செயற்கைகோளை செலுத்தும் முயற்சியில் சதீஷ் தவான் விண்வெளி மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.145 சதுர கி.மீ., பரப்பில்
விண்வெளி மையம்
நாட்டின் முக்கிய ஒரே ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் சென்னையிலிருந்து 120 கி.மீ., துாரத்தில் ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டாவிலிருந்து வங்ககடலையொட்டி 145 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. சூலுார்பேட்டாவிலிருந்து இம்மையத்திற்கு செல்லும் வழியில் புலிகாட் பறவைகள் சரணாலயமும் உள்ளது. இம்மையத்தில் ராக்கெட் உதிரிபாகங்களை ஒருங்கிணைக்கும் பணி, எரிபொருள் நிரப்பும் பணி, உதிரிபாகங்களை ஒருங்கிணைந்து ராக்கெட் உருவாக்கி அதில் செயற்கைகோள்களை பொருத்தும் பணி, விண்ணில் ஏவும்பணி, விண்ணில் ஏவும் பல வகையான செயற்கைகோள்களை கண்காணிக்கும் பணி போன்றவை நடக்கிறது.
உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி
இதற்காக முதல் ஏவுதளம் 1990 ஆண்டிலிலும், இரண்டாவது ஏவுதளம் 2005 ஆண்டிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுதளத்திலிருந்து செயற்கைகோள்களுடன் ராக்கெட் ஏவுவதை கண்காணிக்க 8 கி.மீ., துாரத்தில் மிஷன் கன்ட்ரோல் ரூம் என்ற கண்காணிப்பு மையமும் உள்ளது. முதல் மற்றும் 2வது ஏவுதளத்திலிருந்து இந்த மையம், தரைவழி ஒயர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்வதிலிருந்து அதை ஒவ்வொரு கட்டமாக விண்வெளிக்கு எடுத்து செல்வது, எரிபொருள் கலன்களை விடுவிப்பது, குறிப்பிட்ட துாரத்தில் விண்ணில் நிலைநிறுத்துவது போன்ற பணிகளை கண்காணிப்பு மையத்திலிருக்கும் விஞ்ஞானிகள் சமிக்கைகள் மூலம் மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட இலக்கிலிருந்து தவறான பாதையில் ராக்கெட் செல்ல முயன்றால் அதை கடலில் விழச்செய்யவும் விஞ்ஞானிகள் தயாராக இருப்பர். இங்கிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டதை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளை உற்சாக
மூட்டினார். அப்போது கொட்டும் மழையிலும் அந்த மையத்திலுள்ள ஒவ்வொரு இடங்களையும் பார்வையிட்டார்.
வெளிநாட்டு செயற்கைகோள்களை அனுப்பும் இந்தியா
ஒரு காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்து நாட்டின் செயற்கைகோள்கள் கூட இந்த விண்வெளி மையத்திலிருந்து ஏவுமளவிற்கு இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத் தொட்டுள்ளது. இங்கிருந்து ஏவப்படும் செயற்கைகோள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தலைவர் சோமநாத் தலைமையில் மைய இயக்குனர் ராஜராஜன், இணை இயக்குனர் வெங்கட்ராமன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூன்றாவது ராக்கெட் கட்டமைப்பு மையம் ரூ.461 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டு 2019 ல் பணிகள் துவங்கின. இதன் திட்ட இயக்குனராக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு கொரோனா தொற்றால் தொய்வடைந்திருந்த பணிகள் மீண்டும் தீவிரமாக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.
இதில் செலவு போக மீதமுள்ள ரூ.131 கோடியை திரும்ப ஒப்படைக்கும் முயற்சியிலும் சதீஷ் தவான் விண்வெளி மையம் ஈடுபட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. இம்மையத்தை பிரதமர் மோடி விரைவில் திறக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் பார்க்க வசதியாக மைய வளாகத்தில் நுழைவு பகுதியில் ஸ்பேஸ் மியூசியம், நுாலகம், தியேட்டர் போன்றவையும் உள்ளன. இந்த மியூசியத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஆர்யபட்டா காலம் முதல் தற்போதைய காலம் வரை சதீஷ் தவான், விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் போன்றோர் காலம் வரையிலான நிகழ்வுகள் படங்கள் மற்றும் மாதிரிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் மாதிரிகள், எரிபொருள் மாதிரி, கிரையோஜெனிக் மாடல், பி.எஸ்.எல்.வி., முதல் ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 வரையிலான மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. ஒன்பது கோள்கள், அவை குறித்த விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
மார்ச் இறுதியில் பி.எஸ்.எல்.வி., சி 55
விஞ்ஞானிகள் கூறியதாவது: முதல் மற்றும் 2வது ஏவுதளத்துடன் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் பணி நடக்கிறது. முதல் ஏவுதளத்தில் ராக்கெட் அதன் மீது சேடிலைட் அடங்கிய டூம் ஒருங்கிணைக்கப்பட்டு பிரமாண்டமான மொபைல் சேவை கட்டடம் பின்னணியில் வைக்கப்படும். கவுண்டவுன் துவங்கியதும் கட்டடம் பின்நோக்கி நகர்த்தப்படும். ஆனால் 2வது ஏவுதளத்தில் மற்றொரு கட்டடத்தில் கட்டமைக்கப்படும் ராக்கெட் செயற்கைகோளுடன் ரயில்வே போகி அமைப்பு மூலம் கொண்டு வரப்பட்டு பிரமாண்டமான கட்டடம் அருகில் வைத்து இறுதி கட்ட சரிபார்ப்பு முடிந்து ஏவப்படும். அடுத்தகட்ட முன்னேற்றமாக ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 திட்டத்தில் அதிக எடை கொண்ட செயற்கைகோள் அதிக உயரத்தில் நிலைநிறுத்தப்படும். இம்மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி., சி 55 ராக்கெட் செலுத்தும் பணிகள் நடக்கின்றன.
236 செயற்கைகோள்களுடன் ராக்கெட்
மேலும் ரீயூஸபிள் லான்ச் வெகிள் எனப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தரையிறங்குவதை சோதனை செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்டை 236 செயற்கைகோள்களுடன் செலுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன என்றனர்.
அனுமதி பெற்று பார்வையிடலாம்
விண்வெளி துறையில் நாட்டின் சாதனையை மாண வர்கள் அறிந்து கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சதீஷ் தவான் விண்வெளி மையத்தை பார்வையிட விரும்புவோர் www.isro.gov.in என்ற இணைய முகவரியில் அனுமதி பெறலாம். விண்வெளி மையம் அனுமதி வழங்கும் குறிப்பிட்ட நாள், நேரத்தில் பார்வையிடலாம்.
எம்.ரமேஷ்பாபு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்