விழுப்புரம்: எல்லாவற்றிற்கும் மத்திய அரசை எதிர்க்கிற திமுக ஏன் என்.எல்.சி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நிழல் நிதி அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தின் நிகர கடன் அடுத்த ஆண்டு ஒரு லட்சம் கூடுதலாக இருக்கும் எனவும் 2024ம் ஆண்டு தமிழகத்தின் கடன் 7 லட்சத்து 53 கோடியாகவும், மின்வாரியத்தில் 47 சதவிகிதம் மின் கட்டணம் குறைக்கப்படும். தமிழக அரசின் நேரடி கடன் 12.53 லட்சம் கோடியாக இருக்க கூடும். இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 20 சதவிகிதம் ஒதுக்கப்படும். அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் வழங்கப்படும்.
என்.எல்.சி. நிர்வாகம் நெய்வேலியில் விவசாயிகள் நிலத்தினை கையப்படுத்த கூடாது அவர்களுக்கு அங்கு அவர்களுக்கு நிலத்தின் தேவையும் இல்லை. தமிழகத்துக்கு ஆண்டுக்கு 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. என்.எல்.சி. நிர்வாகம் தமிழகத்துக்கு 800 மெகா வாட் மின்சாரம் கொடுத்து 5 மாவட்டங்களை அழித்து வருகிறது. என்.எல்.சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தபட்டம் 400 அடி அளவிற்கு சென்றுவிட்டது. என்.எல்.சி. நிர்வாகத்தினர் 40 ஆயிரம் ஏக்கரை பாலைனமாக மாற்றியுள்ளது. என்.எல்.சிக்கு தமிழக அரசு ஆதரவளித்து வருகிறது. மத்திய அரசை எல்லாவற்றிற்கும் எதிர்க்கிற அரசு இதற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறது? பத்தாயிரம் ஏக்கர் நெய்வேலியில் உள்ளது அதில் மின்சாரம் அடுத்த 30 ஆண்டுகள் வரை எடுக்கலாம்.
என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்கு ஒரு நாள் அடையாள கடையடைப்பு பாமக சார்பில் நடத்தபட்டது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. ஒரு நாள் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்த வணிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு பிறகும் நிலம் கையப்படுத்தும் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால் வேறு விதமான போராட்டத்தை கையில் எடுப்போம். என்.எல்.சி. நிர்வாகத்தினரால் தமிழகத்திற்கு முதலீடும் வேலைவாய்ப்பும் இல்லை என்றும் விவசாயம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீரை பாதுக்காக்க என்.எல்.சி. நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். போதைப் பொருட்கள் கரோனா காலகட்டத்தில் அதிகம் பள்ளிகளுக்குள் வந்துள்ளது.
அதனால் தான் தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து காவல்துறையில் தனிப்பிரிவை அமைத்து போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். போதையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதமாதம் தமிழக முதலமைச்சர் தனியாக ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய பாமக கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சியில் தடை சட்டம் கொண்டு வந்தனர். இந்தச் சட்டம் அமலில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தது. அப்போது ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. அதன் பின் 18 பேர்களில் உயிரிழந்துள்ளனர். வருகின்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இதற்கான தடை சட்டத்தினை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். ஏற்கெனவே 10 மாநிலங்களில் தடை சட்டம் அமலில் உள்ள போது 142 நாட்கள் ஆளுநர் எதற்காக கையெழுத்திடாமல் வைத்திருந்தார்?
தமிழக மீனவர்கள் கைது செய்யபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி முதல்வர் தீர்வு காண வேண்டும். கலைஞர் கருணாநிதி மீது மிகப்பெரிய பற்று எங்களுக்கு உள்ளது. மெரினா கடற்கரையில் கலைஞருக்கு சமாதி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அதனால் தான் நாங்கள் அவரது உடல் அடக்கம் செய்ய நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கை திரும்பபெற்றோம். அடக்கம் செய்யப்பட்ட இடத்திலையே கலைஞரின் பேனாவை அமைக்க வேண்டும். கடலில் அமைத்தால் இதை உதாரணமாகக் கொண்டு மற்றவர்கள் தங்களுக்கும் அனுமதி கேட்பார்கள். சூற்றுச்சூழலை பாதுக்காக்கும் வகையில் கடலில் சிலை அமைக்க கூடாது” என்றார்.