பெர்ன்:
சுவிட்சர்லாந்தில் அழகான குளு குளு மலைக்கிராமத்தில் சென்று குடியேற விரும்புவோருக்கு, அந்நாட்டு அரசு 50 லட்சம் ரூபாய் அளிக்கிறது. ஆனால், கூடவே சில நிபந்தனைகளும் உள்ளன.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது.
உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு வந்து குவிந்தபடி இருப்பர். இந்த அழகான சுவிஸ் பனிமலையில், கடல் மட்டத்தில் இருந்து 4,265 அடி உயரத்தில் அல்பினென் கிராமம் உள்ளது.
வாலெய்ஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு செல்லும் வழியில் இந்த கிராமம் உள்ளது. அரிய வகை பறவைகள், வன விலங்குகளுடன் ரம்மியமான தட்ப வெப்பநிலையில் அழகான, அமைதியான வாழ்க்கையை இங்கு வாழலாம்.
சுற்றுலா பயணியருக்கான சவால் நிறைந்த பல விளையாட்டுப் போட்டிகளும் உள்ளன.
ஆனால், குறிப்பிட்டு சொல்லும்படியான காரணங்கள் ஏதும் இன்றி, இந்த கிராமத்தில் வசித்தவர்கள் படிப்படியாக இங்கிருந்து வெளியேறி, வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
இந்த கிராமத்தில் பிழைப்பதற்கு தேவையான வாழ்வாதாரம் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2020 டிச., நிலவரப்படி, இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 243 ஆக உள்ளது.
ஆள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்படும் இந்த கிராமத்தில் குடியேற யாரும் விருப்பப்படுவதில்லை. இங்கு மக்கள் குடியேறுவதை ஊக்கப்படுத்த, சுவிஸ் அரசு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. ‘இங்கு குடியேறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்’ என, அறிவித்தது.
சுவிஸ் குடியுரிமை வைத்துள்ள, 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இங்கு குடியேற விண்ணப்பிக்க முடியும்.
வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் சுவிஸ் நாட்டில் 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்