புதுடெல்லி: ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒரேபாலின திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரிய வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்ஹா, பார்திவாலா அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும், நெருக்கமாக இருப்பதும் குற்றமில்லை என்றாலும், இந்திய குடும்பம் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது’ என்று ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில்,’ இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பான இறுதிக்கட்ட வாதங்கள் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இந்த விஷயத்தில் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும்’ என்று தெரிவித்தனர்.
* மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடவில்லை
ஒரேபாலின திருமணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், தனிப்பட்ட செயல்பாடுகளிலும் அரசு தலையிடுவதில்லை. எனவே எந்தக் குழப்பமும் வேண்டாம். அதே சமயம் திருமணம் என்பது கொள்கைப்பூர்வமான விஷயம். நீங்கள் அதைப் பற்றி மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.