புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்வி வருமாறு: பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் விவரத்தினை மொழி மற்றும் ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும்.
கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்றும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளுக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும் ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும். செம்மொழியான தமிழ்மொழியில் ஆய்வு செய்வதற்கும், ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் என்ன என்றும் அத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும் திட்டம் வாரியாக தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.