தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மதுப்பழக்கம் உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பது கவலை அளிப்பதாக நகைச்சுவை நடிகர் பழைய ஜோக் தங்கதுரை தெரிவித்துள்ளார்.
போதையற்ற தமிழகத்திற்கான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட தங்கதுரை, பின்பு செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “இன்று இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.
ஒரு இளைய தலைமுறை இப்படி ஒரு போதைப் பழக்கத்துக்கு அடிமையாக செல்வது வருத்தமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ள முதல்வர் ஸ்டாலின், அதனை மீறி விற்பனை செய்தால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். ஏழை மக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சென்று போதை பொருள் விற்று வரக் கூறுவதாக செய்திகள் வருகின்றன. இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று தங்கதுரை தெரிவித்தார்.