புதுடில்லி, :தமிழகம், கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளைகளில் நடந்த முறைகேடு புகார்கள் மீதான சி.பி.ஐ., விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், கடந்த 2020ல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி, சி.பி.ஐ., விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
இடைக்கால தடை
இதற்கிடையே குற்றஞ் சாட்டப்பட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு இடைக்கால தடை பெற்றனர்.
இத்தடை, கடந்த 2022 ஜூனில் முடிவடைந்த நிலையில், தமிழக கவர்னர் ரவி, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளை கூண்டோடு கலைத்து விட்டு, தற்காலிகமாக ஒரு குழுவை நியமித்தார்.
இந்நிலையில், தமிழக செஞ்சிலுவை சங்க முன்னாள் நிர்வாகிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
வழக்குப்பதிவு
இதேபோல் கேரளா, கர்நாடகா, அசாம் மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபாரில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் மீதும் பல்வேறு முறைகேடு புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவை குறித்தும் வழக்குப்பதிவு செய்து, சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்