பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி. இவரது மனைவி நித்யா (27). இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் ஆடுகளை பக்கத்தில் உள்ள ஓடை பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற நித்யா, இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. ஆனால், ஆடுகள் மட்டும் வீடு திரும்பின. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவேகானந்தன், நித்யாவை தேடி ஆடு மேய்க்கும் ஓடை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு முட்புதருக்குள் ஆடைகள் களையப்பட்டு, அரை நிர்வாண கோலத்துடன் முகம், கழுத்து பகுதியில் ரத்த காயங்களுடன் நித்யா இறந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நித்யாவின் உறவினர்கள், மர்ம நபர் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, குற்றவாளியை கைது செய்யும்வரை, நித்யாவின் உடலை வாங்கப் போவதில்லை எனக்கூறி நாமக்கல் அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களிடம் எஸ்பி கலைச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். ஆனால், நேற்று மாலை 5 மணியளவில் உடலை வாங்க மறுத்து, அனைவரும் பஸ்சில் ஏறி தங்களது ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நித்யாவின் உடல் பிணவறையில் இன்று 2வது நாளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொலை குற்றவாளியை நெருங்கி விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் கொலையாளியை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.