புதுடில்லி, புதுடில்லியில் இருந்து தோஹாவுக்கு சென்ற, ‘இண்டிகோ’ விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், அந்தப் பயணி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதுடில்லியில் இருந்து, மேற்காசிய நாடான கத்தாரின் தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் அதில் பயணித்த, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த பயணிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள விமான நிலையத்துக்கு, விமானி அனுமதி கோரினார். அனுமதி கிடைத்த தால், விமானம் தரையிறக்கப்பட்டது. டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால், அந்தப் பயணி ஏற்கனவே இறந்து விட்டதாக, அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு, ஐந்து மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புதுடில்லிக்கு திரும்பியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement