வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் வருகின்றனர். இந்த வில்லிவலம் ஊராட்சியில் 71.82 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மூலம் 332 ஏக்கர் விலை நிலங்களுக்கு, விவசாயிகள் நீர் பாசனம் செய்து வருகின்றன. இந்நிலையில், மழைக்காலங்களில் போதிய அளவில் நீர் பிடிப்பின்றி காணப்படுவதால், விவசாயம் என்பது இப்பகுதி மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இதனால், இந்த ஏரியை ஆழப்படுத்தி, இங்குள்ள மதகுகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில், ஏரியை தூர்வாரியும், மதகுகளை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்.
இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்து கொண்டு ரூ.51.95 லட்சம் மதிப்பீட்டில் ஏரி முழுவதும் தூர்வாரி ஆழப்படுத்துதல், கரையை உயர்த்துதல், மதகுகள், கலங்கள் மற்றும் ஏரியின் வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை துவக்கி வைத்து, இப்பணிகள் அனைத்தையும் மழைக்காலங்களுக்கு முன், விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் நீள்குடியான், இளைய செயற்பொறியாளர் மார்க்கண்டேயன், ஊராட்சி மன்ற தலைவர் மோகன், துணை தலைவர் மோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சஞ்சய்காந்தி, கலையரசி, தாங்கி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம், திமுக நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஜெயசீலன், குப்புசாமி, பன்னீர்செல்வம், குமரன், இன்பசேகரன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.