கடந்த ஜனவரி 29-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். அதன்பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடந்து முடிந்தது. பிப்ரவரி 11-ம் தேதி முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் இரு அவைகளும் தற்போது கூடியுள்ளது. இரண்டாம் அமர்வு கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்பின்மை, அதானி விவகாரம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவற்றை குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்தன. இந்த நிலையில், இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடியின் கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதிகாரி போன்றுதான் அவர்கள் நாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவையில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மைக்குகள் அணைக்கப்பட்டுவிடுகின்றன. இதனால் அவையில் அமளி தொடங்கி விடுகிறது. ஜனநாயகம் பற்றி ராகுல் காந்தி என்ன சொன்னாரோ, அதுதான் நடக்கிறது. இது விதிகளின்படி தவறானது” எனத் தெரிவித்திருக்கிறார்