புதுடெல்லி: அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை அரசு சார்பில் ஆணையம் எதுவும் அமைக்கப்படவில்லை என மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம், பங்குச் சந்தை மோசடிகள்,கார்ப்பரேட் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக, குற்றம் சாட்டியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன என்றும் அதானி குழுமம் கூறியது.
அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மக்களவையில் அதானி விவகாரம் குறித்து எம்பி.க்கள் பலர் கேள்வி எழுப்பினர். அதற்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,‘‘ அப்படி எந்த ஒரு விசாரணை ஆணையமும் ஒன்றிய அரசால் அமைக்கப்படவில்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான உபகரணங்கள் இறக்குமதி தொடர்பான வருவாய் புலனாய்வு துறை விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,‘‘இதில் விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார். ஆனால், அது பற்றிய விவரங்களை அவர் வெளியிட மறுத்து விட்டார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,‘‘ அதானி குழுமத்துக்கு எதிரான பங்கு சந்தை முறைகேடுகள் குறித்து செபி விசாரணை நடத்தி வருகிறது’’ என தெரிவித்துள்ளார்.