புதுடெல்லி: சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது. கடந்த 2006-ம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், குன்னமங்கலத்தை சேர்ந்த கரீம் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட முகமது ஹனீபா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். அவரை கைதுசெய்ய இன்டர்போல் உதவியை நாடினோம். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு முகமது ஹனீபா சவுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இன்டர்போல் போலீஸ் உதவியுடன் அண்மையில் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுபோல் நிதி, பண மோசடி,கடத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பியோடும் குற்றவாளிகளை ‘ஆபரேஷன் திரிசூல்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வருகிறோம்.
கடந்த ஆண்டு இந்த திட்டத்தை தொடங்கினோம். இதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஓராண்டில் 33 குற்றவாளிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளோம். அண்மையில் ரூ.45,000 கோடி சிட்பண்ட் மோசடி வழக்கில் தொடர்புடைய ஹர்சந்த் சிங் கில் என்பவரை பிஜி குடியரசு நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்தோம். தற்போது கேரள போலீஸாரால் தேடப்பட்ட முகமது ஹனீபாவை அந்த மாநில போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறோம்.
இவ்வாறு சிபிஐ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.