நாய்க்கடி சம்பவங்கள்: `இதை செய்தால் ஆறு மாதங்களில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்!’

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், தெருநாய்க்கடிகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, விலங்குகளுக்குக் கருத்தடை செய்வதே தீர்வு என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நம் நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, தொடர் பிரச்னையாக மாறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 1.2 கோடியாக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கையானது, தற்போது 6.2 கோடியாக அதிகரித்துள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவும், சீனாவும் முன்னிலை வகிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

செல்லப்பிராணிகள்

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமானதால் தெருநாய்க்கடிகளும் அதனால் ஏற்படும் இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் தெருநாய்க்கடியால் இறப்பதாக உலக சுகாதாரத்துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, `ஜனவரி-2019 முதல், ஜூலை – 2022 வரை 1.5 கோடி மக்கள் பல்வேறு விலங்குகளினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது பற்றியும், தெருநாய்க் கடிக்கான தீர்வு பற்றியும் நகர்ப்புற விலங்கு நல ஆர்வலர் தீபக் நம்பியாரிடம் பேசினோம்.

“தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் இருப்பதே அவற்றின் எண்ணிக்கை அதிகமானதற்கான முதன்மைக் காரணம். கடந்த 2015-க்கு முன்பு வரை ப்ளூகிராஸ் அமைப்பும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்து வந்தன. அதனால் அவற்றின் எண்ணிக்கையானது கட்டுக்குள் இருந்தது. ஆனால், அதன் பிறகு செய்யப்படவில்லை.

மேலும், கொரோனா காலகட்டத்தில் நாய்களை வாங்கி வீட்டில் வளர்த்தவர்கள், லாக்டவுன் முடிந்தவுடன், அதனைக் கண்டு கொள்ளாமல் தெருவில் விட்டதும் தெருநாய் தொல்லை அதிகமானதற்கான காரணம். விலங்குகள் நல வாரிய அமைப்புகளும், கால்நடை மருத்துவக்கல்லூரிகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நாய்களுக்கு கருத்தடை செய்ய முன்வர வேண்டும். இதற்கு அரசின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு செய்தால், இன்னும் ஆறு மாதங்களில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.

Representational image

தெருநாய்க்கடி பற்றி கடந்த சில மாதங்களாக தொடர் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தெருநாய்கள் கடிப்பதற்கான முக்கியக் காரணம் அதற்கு உணவு கிடைக்காமல் இருப்பதுதான். எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்தி, அவற்றுக்கு உணவு கிடைக்க தனிநபர்கள், ஆர்வலர்கள், அரசு உரிய முயற்சி எடுத்தால் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.