புதுடில்லி, மருத்துவ அலட்சியம் எது என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ள நிலையில், இது தொடர்பான நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
விசாரணை
மருத்துவ அலட்சியம் எது என்பது தொடர்பாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ௨௦௦௫ல் அளித்த உத்தரவில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இடைக்கால நிவாரணமாக, மருத்துவ அலட்சியம் தொடர்பான புகார்கள் குறித்து, மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு, விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
ஆனால், இதில் தெளிவு இல்லாததால், எந்த அமைப்பை அணுகுவது என்பது தொடர்பாக, விசாரணை அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இடைஞ்சல்
இந்நிலையில், மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் அலட்சியமாக செயல்பட்டதாக புல புகார்கள் உள்ளன.
நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.
மேலும், மருத்துவ அலட்சியம் தொடர்பாக யாரை அணுகுவது என்பது தெரியாததால், நோயாளிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ அலட்சியம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்படுவது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ கல்வி கொள்கைப் பிரிவின் இணைச் செயலரும், மத்திய சுகாதாரத் துறையின் தகவல் அதிகாரியுமான சுனில் குமார் குப்தா அளித்துள்ள பதிலில், ‘வழிகாட்டு நெறிகள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.
‘விரைவில் இது இறுதி செய்யப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்