சேலம் மாவட்டத்தில் வாழப்பிடிக்கவில்லை என மாமியாரிடம் கூறிவிட்டு தூக்குப்போட்டு மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தறி தொழிலாளி குமார்(45). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குமார் கடந்த 6 மாதமாக சங்ககிரி பகுதியில் உள்ள தறி பட்டறையிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், குமார் மாமியாருக்கு போன் செய்து எனக்கு மனசு சரியில்லை, வாழப்பிடிக்கவில்லை. எனது உடலை நீங்கள் அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக மனைவி மற்றும் உறவினர்கள் சங்ககிரி தறி பட்டறைக்கு சென்றுள்ளனர். ஆனால் குமார் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.