வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை..!!

2023 – 2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பு பாமக சார்பாக பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் வெளியிடப்பட்டது. விழுப்புரத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டனர்.

இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில், “2023-24-ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை வரும் 20ம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, அதன் 21-ஆவது நிழல் நிதிநிலை அறிக்கையை (Shadow Budget) பொதுமக்களின் மேலான பார்வைக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்தப் பணியை தமிழக மக்களுக்கு தான் ஆற்றக்கூடிய மகத்தான சமூக, பொருளாதார, அரசியல் கடமையாக பாமக கருதுகிறது.

இந்த மாநில மக்கள் மீதும், சமூக நீதியோடு கூடிய வளர்ச்சியின் மீதும், ஏழை, எளிய, நடுத்தர அனைத்துத் தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் மீதும் உண்மையான, உணர்வுப்பூர்வ அக்கறைக் கொண்டுள்ள எங்கள் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா சிந்தனைகள், விவேகம், வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவின் நிழல் நிதி அறிக்கையின் சிறப்பம்சங்கள்:

  • ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
  • முதியோர், ஆதரவற்றோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும். 20 லட்சம் பேருக்கு இந்த நிதியுதவி வழங்க ரூ.3,600 கோடி ஒதுக்கப்படும்.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படும்.
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • மே 1ம் தேதியிலிருந்து மதுவிலக்கு தமிழ்நாட்டில் கொண்டுவரப்படும்.
  • ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
  • என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படாது.
  • பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு போதையில்லா மாநிலமாக மாற்றப்படும்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.