சேலம் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி பேருந்து கிளீனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி பேருந்து கிளீனர் அறிவழகன் (24). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டு முன்பு நின்று இருந்த 13 வயதுடைய 9ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் அறிவழகனை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 9ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த அறிவழகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.