புதுடெல்லி: அதானி குழுமம் மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க வலியுறுத்தி அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட நிலையில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதானி குழும நிறுவனம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்துள்ளதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதிதொடங்கியது. இந்த விவகாரத்தால் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கி வருகின்றன. இந்நிலையில், 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி நேற்று பேரணியாக புறப்பட்டனர். அதானி குழும விவகாரத்தில் ஜேபிசி விசாரணை கோரியும் மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதைக் கண்டித்தும் இந்தப்பேரணி நடைபெற இருந்தது.
ஆனால், போலீஸார் அப்பகுதியில் ஏராளமான தடுப்புகளை அமைத்திருந்தனர். மேலும், அங்கு கூடியிருந்த போலீஸார் பேரணியை தடுத்துநிறுத்தினர். இதனால் எதிர்க்கட்சி
யினரால் திட்டமிட்டபடி பேரணியை நடத்த முடியவில்லை. இதனால் பேரணியை ரத்து செய்துவிட்டு நாடாளுமன்றத்துக்கு திரும்பினர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றோம். ஆனால் அங்கு கூடியிருந்த சுமார் 2 ஆயிரம் போலீஸார் எங்களை தடுத்து நிறுத்திவிட்டனர். ஒருபுறம் எங்கள் குரலை ஒடுக்கும் அவர்கள், மறுபுறம் ஜனநாயகம் குறித்து பேசுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து பேசுபவர்களை நாட்டுக்கு எதிரானவர்கள் என ஆளும் கட்சியினர் குற்றம் சுமத்துகின்ற னர்” என்றார்.
இந்தப் பேரணியில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஜனநாயகத்தை பாஜக சீர்குலைக்கும் விதமே, நாட்டில் ஜனநாயகம் பலவீனம் அடைவதை காட்டுகிறது. அதானி குழுமத்தை பற்றி எந்த கருத்து தெரிவித்தாலும், அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.
ராகுல் தெரிவித்த கருத்தால் பாஜக ஏன் ஆவேசம் அடைகிறது? இது அதானியை காப்பாற்று வதற்காக ஏற்படுத்தப்படும் கூச்சல். அதனால்தான், அமைச்சர்களே நாடாளுமன்றத்தில் இடையூறு செய் கின்றனர். ஜனநாயகம் இவ்வாறு சீர்குலைக்கப்படுவதைதான் ராகுல் காந்தி கூறினார். ராகுல் கூறியது தவறு என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு சுப்ரியா ஸ்ரீநதே கூறினார்.