வாஷிங்டன் :இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயர் எரிக் கார்ஸெட்டி, 52, நியமிக்கப்பட்டுள்ளார். இவரை துாதராக நியமிக்கும் அதிபரின் பரிந்துரையை, அந்நாட்டு செனட் சபை நேற்று முன்தினம் உறுதி செய்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 நவ., மாதம் முடிவடைந்து, ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக பதவி வகித்து வந்த கென்னத் ஜஸ்டர், 2021 ஜன., மாதம் பதவி விலகினார்.
இதை தொடர்ந்து, தன் நெருங்கிய நண்பரும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயருமான எரிக் கார்ஸெட்டியை, இந்தியாவுக்கான துாதராக நியமிக்க அதிபர் பைடன் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை அமெரிக்க செனட் சபை உறுதி செய்ய வேண்டும். அப்போதைய நிலையில், செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு போதைய பெரும்பான்மை இல்லை.
மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக கார்ஸெட்டி பதவி வகித்த போது, அவரது ஆலோசகர் மேல் கூறப்பட்ட பாலியல் புகார் குறித்து அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. இதன் காரணமாக பல செனட் உறுப்பினர்கள் கார்ஸெட்டி மீது அதிருப்தியில் இருந்தனர்.
செனட் சபையில் இந்த பரிந்துரை நிலுவையில் இருந்ததால், இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பதவி இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்தது. இத்தனை நாட்கள் இந்த பதவி காலியாக இருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.
இந்நிலையில், இந்தியாவுக்கான துாதராக எரிக் கார்ஸெட்டியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் மீண்டும் பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரை, செனட் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. ஆதரவாக 54 ஓட்டுகளும், எதிராக 42 ஓட்டுகளும் பதிவானதை தொடர்ந்து, எரிக் கார்ஸெட்டியின் நியமனத்துக்கு, செனட் சபையின் ஒப்புதல் கிடைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்