இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70,000 கோடியில் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70,000 கோடியில் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடற்படைக்கு 60 மேட் இன் இந்தியா யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்கள், சூப்பர் சோனிக் ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய பாதுகாப்பு படைகளுக்கு பல்வேறு முக்கிய தளவாடங்களை கொள்முதல் செய்வதைக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தற்போது பல்வேறு பரிசோதனைகளை நடத்தி அந்த ஆலோசனைகளின் அடிப்படையில், ரூ.70,000 கோடி மதிப்பிலான பல்வேறு கொள்முதல்களை உறுதி செய்துள்ளது.

அதன்படி, ரூ.32,000 கோடி செலவில் இந்திய கடற்படைக்கு 60 ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலேயே தயாரித்து கடற்படைக்கு வழங்கப்படும். இவை தவிர பிரமோஸ் வகை நெடுந்தூரம் சென்று தாக்கும் சோனிக் ஏவுகணைகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்ஸர்கள் பீரங்கிகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது தவிர கடலோரக்காவல் படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராணுவம், கடற்படை, விமானபடைக்கு தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில், அதனை படிப்படியாக இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் தற்போது இந்த குழு முடிவெடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.