ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அடுத்த தக்கோலம் கீழ் கடைத்தெருவில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சிமெண்ட் மற்றும் கட்டுமானத்திற்கான பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடை முன்பாக கடந்த மார்ச் 11-ம் தேதி கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முத்துராமலிங்கம் இது குறித்து தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த இளைஞர் ஒருவர் முத்துராமலிங்கத்தின் கடைக்கு சென்று அவரை நேரில் மிரட்டியுள்ளார். இதனையடுத்து முத்துராமலிங்கம் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் அவரது கடை முன்பாக இரண்டு இளைஞர்கள் கற்களை வீசி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர் மேலும் கடையை திறந்தால் ஒழித்து விடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் முத்துராமலிங்கம் தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் பயந்து போன முத்துராமலிங்கம் கடையை பூட்டிவிட்டு அதில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளார். அதில் கஞ்சா போதையில் வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது என்று எழுதியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.