தமிழகத்தில் கல்வியில் ஊழல் நடந்திருப்பதாக, தமிழக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வுகளுக்கு 50,000 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில் 46,000 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

50,000 பேர் தேர்வு எழுத முடியாத அளவுக்கு கல்வியின் தரம் குறைந்திருக்கிறதா… இந்த மாணவர்களின் அச்சத்துக்குக் காரணம் என்ன… என்பன போன்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், 46,000 மாணவர்களும் இடைநின்றவர்கள் என்று, அதாவது பதினோராம் வகுப்பிலேயே பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. படிக்காத மாணவர்களைப் படிப்பதாக கணக்கு காண்பிக்கும் மர்மம் என்ன… இது உண்மையென்றால், கடந்த இரு வருடங்களாக அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றனர் என்று திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிக்கைவிட்டுக்கொண்டிருந்தது உண்மைக்குப் புறம்பானது என்பது புலனாகிறது.
அப்படியென்றால், தவறான செய்தியை வெளியிட்டு விளம்பரப்படுத்திக்கொண்டது ஏன் என்பதை தமிழகக் கல்வித்துறை விளக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருடமும், இலவச சீருடை, மடிக்கணினி, சைக்கிள், பாடப் புத்தகங்கள், கட்டணச் சலுகை உள்ளிட்டவற்றுக்கு அரசு சுமார் ரூ.70,000 செலவிடுகிறது. இந்த நிலையில், இடைநிற்றலால் தேர்வுக்கு வரவில்லை என்று குறிப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் மேற்கண்ட சலுகைகள் அளிக்கப்பட்டனவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லாத மாணவர்கள் இருப்பதாக கணக்கு காண்பிக்கப்பட்டிருந்தால் பெரும் ஊழல் இந்த விவகாரத்தில் நடந்திருப்பதாக உறுதியாகச் சொல்ல முடியும். அதாவது 46,000 x 70,000. அதாவது ப்ளஸ் ஒன் வகுப்புக்கு ரூபாய் 322 கோடியும், ப்ளஸ் டூ வகுப்புக்கு ரூபாய் 322 கோடியும், ஆக மொத்தம் ஒவ்வொரு வருடமும் ரூபாய் 644 கோடி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா… இல்லாத மாணவர்கள் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டு முறைகேடு நடக்கிறது என்பதை மறுக்க முடியுமா… ஒரு வேளை, இந்த இலவசங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால், 46,000 மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்ந்திருப்பார்கள் என்பதும் உறுதி.
மாணவர்கள் படிப்பை தொடராமல் இருந்திருந்தாலும், தொடர்ந்திருந்து தேர்வு எழுத வராது இருந்திருந்தாலும், அதற்கு கல்வித்துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சரும்தான் பொறுப்பு. இந்த விவகாரத்தில் ஊழல், முறைகேடு நடந்திருந்தால் அதற்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால் நடந்த குற்றத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருத்தம் தெரிவித்து பொறுப்பேற்பதோடு, கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் ஊழல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.