மதுரை: மதுரை வைகை ஆற்றில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரத்தில் கழிவு நீர் பெருக்கெடுத்து கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நேரத்தில் மட்டுமே இப்பகுதியில் கழிவு நீர் வருவதை தடுத்து திசைமாற்றிவிடப்படும் நிலையில், இந்த ஆண்டாவது நிரந்தரமாக கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மதுரையையும், வைகை ஆற்றையும் பிரித்துப்பார்க்க முடியாது. ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரமாாக இருப்பதால் ஆண்டு முழுவதுமே மதுரையில் திருவிழாக்களுக்கு பஞ்சமிருக்காது. அதனாலே, மதுரை திருவிழாக்களின் நகராக போற்றப்படுகிறது. அதில் முக்கிய திருவிழாவான சித்திரைத்திருவிழா, வைகை ஆற்றில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து எதிர்சேவை வரும் கள்ளழகர், அழ்வார்புரம் பகுதியில் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இந்த நிகழ்ச்சி சித்திரைத்திருவிழாவில் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது.
வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை காண, ஆழ்வார்புரம் ஆற்றை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். திருவிழா காண கிராமங்களில் இருந்து மாட்டுவண்டி கட்டி வருவோர் ஆற்றின் இரு புறங்களிலும் டெண்ட் அமைத்து தங்குவார்கள். அதனால், சித்திரைத்திருவிழா நாட்களில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றை புனிதமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த கால்நூற்றாண்டாக திருவிழா நேரத்தில் மட்டும் கழிவு நீர் திசைமாற்றிவிடப்பட்டு ஆழ்வார் புரம் வைகை ஆறு புனிதமாக பாமரிக்கப்படுவதும், திருவிழா முடிந்ததும் இப்பகுதி வைகை ஆறு கழிவு நீர் சங்கமிக்கும் இடமாகவும் மாறிவிடுகிறது. மதுரை நகர் பகுதி வைகை ஆற்றில் கடந்த காலத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் கலந்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நெருக்கடி, போராட்டத்தால், மாநகராட்சி பெரும்பாலான இடங்களில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்துவிட்டது. ஆனால், தற்போது வரை ஆழ்புரத்தில் கள்ளழகர் ஆற்றில் இறக்கும் பகுதியில் மட்டும் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியவில்லை.
தற்போது வைகை ஆறு கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாகவும் மனிதர்கள் கழிவகளை கொட்டும் இடமாகவும் காட்சியளிக்கிறது. கழிவு நீர் கலப்பதால் நோய் பரப்பும் இடமாகவும் மாறிவிட்டது. வைகை ஆற்றில் கடந்த காலத்தில் சமதளத்தில் தண்ணீர் உருண்டோடியது. தற்போது மணல், மண் அள்ளிய இடங்கள் பள்ளங்களாககவும், மற்றப்பகுதிகள் மேடாகவும் உள்ளது. அதனால், வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடும்போது நீரோட்டமும், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து வைகை நிதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ‘‘வைகை ஆற்றில் தற்போது பரவை, சமயநல்லூரில் கழிவு நீர் கலக்கிறது. விளாங்குடியில் 4 இடங்களில் கலக்கிறது. வைத்தியநாதபுரம், இஎஸ்ஐ மருத்துவமனை சாலை பின்புறம், அருள்தாஸ்புரம், தத்தனேரி, எல்ஐசி அருகே, ஆழ்வார்புரம், செல்லூர் சாலை பின்புறத்தில் 2 இடங்கள், ஒபுளாபடித்துரை வடக்கு பகுதி, அண்ணாநகர் பின்புறம் ஆகிய இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. இந்த இடங்கள சுட்டிக்காட்டி மாநகராட்சிக்கும், மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கும் புகார் அனுப்பினோம். மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் சமீபத்தில் வந்து ஆய்வு செய்தார்கள். வைகை ஆறு எந்தளவுக்கு மாசு அடைந்துள்து என்பதை பார்க்க அங்கு தேங்கிய தண்ணீரையும் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
தற்போது அதன் விவரத்தை கேட்டால் தகவல் தர மறுக்கிறார்கள். கழிவு நீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை இல்லை. நிரந்தரமாக வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க எந்த திட்டமும் மாநகராட்சியிடமும், மாசு கட்டுப்பாட்ட வாரியத்திடமும் இல்லை. கோரிப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றை ஓட்டி கழிவு நீர் சத்திகரிப்பு தொட்டிகள் அமைத்தும் ஆழ்வார்புரத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியவில்லை. சித்திரைத் திருவிழாவுக்காக மட்டுமில்லாது நிரந்தரமாக வைகை ஆற்றின் புனிதத்தை காக்க மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சியும் முன் வர வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.