காரமடை அருகே வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானை: உணவு உட்கொள்ள முடியாமல் அவதி

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட ஆதிமாதையனூர் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமமாகும். இங்கு இரவு நேரங்களில் காட்டு யானை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள விளைநிலம் ஒன்றில் நுழைந்த காட்டு யானை நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே முகாமிட்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு காரமடை வனச்சரகர் திவ்யா தலைமையில் வனத்துறையினர் வந்தனர். அப்போது வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக யானை அங்கேயே சுற்றிதிரிந்ததை கண்டனர்.

பின்னர் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக யானையால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாயில் காயம்பட்ட நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் காட்டு யானை அவதிப்பட்டு வருகிறது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து காயம்பட்ட யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.