கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே ஃபாத்திமா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்கச் சபையில் பாதிரியாராக இருக்கிறார. இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள சர்ச்சுகளில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகேயுள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில், பாதிரியார் பெனடிக்ட் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக பரவி வருகின்றன. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்சாட்டுகளும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட்டுகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதே சமயம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோமீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால், வழக்கு பதிவுசெய்யப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட்மீது போலீஸில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், “பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்த சமயத்தில், நான் பிரார்த்தனைக்காகச் சென்றேன். அப்போது பாதிரியார் என்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து, உடலில் மோசமாகத் தொட்டார். பின்னர் வாட்ஸ்அப் மூலம் ஆசையைத் தூண்டும்விதமாக மெசேஜ் அனுப்பினார். அவருடைய அந்தரங்க உறுப்புகளை போட்டோ எடுத்து, அவற்றை எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார்.

மேலும், பேச்சிப்பாறையிலிருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றலாகிச் சென்ற பிறகும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தினார்” எனக் குறிப்பிட்டிருந்தார் அந்த இளம்பெண். அந்தப் புகாரின் அடிப்படையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோமீது நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைதளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸார் தேடி வருகின்றனர்.