டி.வி. கூட இல்லாம ஒரு வீடு இருந்தது! – 90ஸ் பள்ளி நினைவுகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

எவ்வளவு தான் நாம பாஸிட்டிவா இருந்தாலும் இந்த வாழ்க்கை ஒரு சோகமான மியூஸிக்கை பேக்ரவுண்டில் ஒலிக்க கூடிய வாய்ப்பை, நாம் கேட்காமலே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு நாம் கஷ்டப்படுவதை கெத்தாக ஓரமாய் நின்று ரசித்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அப்படி சோகமாய், எப்பொழுதெல்லாம் பலவீனமாய் உணர்கிறேனோ அப்போதெல்லாம் தேற்றுவதற்கு தேவாவின் “கவலைப்படாதே சகோதராவோ”, வைகைப்புயலின் “ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி” வசனமோ, நா.முத்துகுமாரின் “வேடிக்கை பார்பவனோ”, தியாகராஜா குமாரராஜாவோ, வெற்றிமாறனோ, ராமோ துணை நிற்பார்கள்.

Representational Image

இவைகளில் எதுவும் கைக்கொடுக்காத கையறு நிலையில் தம்ஸ் அப் காட்டி தோளில் கைப்போட துடித்துக் கொண்டிருப்பது “சூது கவ்வும்” படம் தான். அப்படி சோகமான ஒரு நாளில் உற்சாகமாய் “சூது கவ்வும்” பார்த்துக்கொண்டிருந்தேன்…

காலையில் வேலைக்குச் சென்ற அசோக் செல்வன் வேலையை பறிகொடுத்து விட்டு சோகமாய் ரூமுக்கு வருவார்… “ஊரிலிருந்து” அன்று தான் முதன்முறையாக சென்னை வந்த பாபி சிம்ஹாவும், ரமேஷ் திலக்கும் ரூமில் இருப்பார்கள்.

அப்போது ரமேஷ் திலக் என்னடா “சீக்கிரம்” வந்துட்ட எனக் கேட்க சட்டென பாபி சிம்ஹா இல்லையே “ஏழு” மணி ஆகிடுச்சே என்பார். போகிற போக்கில் எதார்த்தமாக வரும் இந்த வசனத்தை எத்தனை பேரு கவனித்தீர்கள்… எத்தனை பேர் வாழ்வில் நடந்திருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த ஏழு மணி நிறைய நேரங்களில் ஏழரையாக இருந்திருக்கிறது.

Representational Image

பள்ளி நாட்களில் ஒருநாளும் ஏழு மணிக்கு முன் வீட்டிற்கு வந்ததில்லை. 4.30 மணிக்கு பள்ளி கடைசி மணி எப்படா அடிக்கும் என பையும் கையுமாக வீட்டிற்கு ஓடுபவர்களுக்கு மத்தியில் ஏழு மணியானாலும் வீட்டுக்குச் சென்றதில்லை என்றால் வீடு தராத, வீட்டில் கிடைக்காத, வீடு ஏற்படுத்திக் கொடுக்காத ஏதோவொன்று அந்த நேரத்தில் பள்ளி மைதானத்திலும், தெருவோர கடைகளிலும் எங்களுக்கு கிடைத்திருக்கும் தானே.  

90ஸ் குழந்தைகளின் அப்போதைய அதிகபட்ச ஆசை, பொழுதுபோக்கு, கனவு “டி.வி” பார்ப்பது. அதுவும் தன் வீட்டில் சொந்தமாக டிவி வாங்கி கேபிள் கனெக்சன் இழுத்து சோஃபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து “டென்ஸ் ஸ்போர்ட்ஸ்”ல் ஜான் சீனாவும், ரேன்டி ஆர்டனும் கட்டிபிடித்து எட்டி உதைப்பதை ஹோம் தியேட்டர் சத்தத்தோடு பார்க்க வேண்டும். அதற்காகத் தான் எல்லா குழந்தைகளும் அவர்கள் வீட்டிற்கு வேகமாகச் செல்வார்கள். ஆனால் நான் வோட்டர் ஐடி கூட வாங்கிவிட்டேன் அப்போது கூட எங்கள் வீட்டில் டி.வி. வாங்கியதாக இல்லை. பிறகு எங்கிருந்து மணி அடித்ததும் நேராக வீட்டிற்கு வருவது.

Representational Image

ஒரு ரூபாய், இரண்டு ரூபாயை கையில் வைத்துக்கொண்டு தெரு தெருவாய் அலைவோம் எந்த டீக்கடையில் WWE ஓடுகிறதென துப்பறியும் அதிகாரிகள் போல அலசுவோம். பெரும்பாலான டீக்கடைகளில் அந்த காலத்து பாடல்களே ஒலிக்கும். எங்கள் ரசனை புரிந்துக்கொண்ட ஏதோ ஒரு புண்ணியவான் சுட சுட பஜ்ஜியும் போட்டு WWE மேட்ச்சையும் போட்டு கடை வந்திருப்பான். இரண்டு ரூபாய்க்கு பஜ்ஜி வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு மணி டி.வி. பார்ப்போம்.

என் அப்பா எதிரியாக நினைப்பது விளையாட்டைத் தான். செய்தியில் கூட விளையாட்டு செய்தி வந்தால் அவருக்கு பிடிக்காது. அதுவும் கிரிக்கெட் அவரின் பரம எதிரி. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல… எனக்கும் கிரிக்கெட்டிற்கும் மிகவும் நெருங்கிய நட்பு ஏற்பட்டுவிட்டது. வீட்டிற்கு போனால் நிச்சயம் விளையாட வாய்ப்பில்லை… பள்ளி முடிந்த பிறகு மைதானங்களுக்கு யாரும் துணையில்லை என யோசித்து இருட்டும் வரை மைதானத்திற்கு துணையாய் இருப்போம் என எண்ணி விளையாடித் தீர்ப்போம். ஒவ்வொரு நாளும் எங்களின் ஆட்டத்தை வேடிக்கைப் பார்த்து ரசித்து, குதூகலித்து விட்டு தான் சூரியனே கிளம்பிச் செல்லும்.

Representational Image

கால் முழுக்க மைதானத்தின் பாசங்கள் மண்ணாய் ஒட்டியிருக்க, உடல் முழுக்க வியர்வையில் குளித்திருக்க ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு சுடச் சுட மசாலா பூரியும், ஜில்லென ப்ரூட் மிக்ஸரும் குடித்துவிட்டு மணி பார்த்தால் மணி ஏழு ஆகியிருக்கும். மனதிற்குள் மரணம் பயம் இருந்தாலும் ஏழு மணி தானே ஒன்னும் பெரிய நேரமாகி விடவில்லை மெதுவா போவும் நம்ம கிட்டத்தான் கைவசம் ஸ்பெஷல் கிளாஸ், ஈவ்னிங் கிளாஸ், நல்ல படிக்கிறதுனால எக்ஸ்ட்ரா கிளாஸ்னு ஆயிரம் கதை இருக்கேன்னு தைரியமா போவோம்.

ஒருநாளாவது ஏழு மணிக்கு முன்னாடி வந்திருக்கியா… அப்படி என்ன உனக்கு மட்டும் ஏழு மணி வரைக்கும் ஸ்கூலு நாளைக்கு வரேன் ஸ்கூலுக்கு வந்து உங்க எச்.எம்.கிட்ட பேசுறேன்னு புதுசா சொல்ற மாதிரி மெரட்டுவாங்க. ஆனா அது ஆயிரத்து எட்டாவது தடவையா இருக்கும்.

அதெல்லாம் நினைச்சா இப்போ கனவு மாதிரி இருக்கு. இப்ப எல்லாம் டிவில தான் மேட்ச் பார்க்கனும் இல்ல மொபைலயே ஏதேதோ “ஆப்” எல்லாம் வந்துருச்சு… ஜான் சீனாவும், ரேன்டி ஆர்டனும் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்ல கூட பார்க்க முடியறது இல்ல. இன்னைக்கு எத்தனை மணிக்கு போனாலும் யாரும் எதுவும் கேட்கறதில்ல. எளிமையா கிடைக்க வேண்டிய ஒரு சின்ன விஷயத்துக்கு கூட எவ்வளவு எவ்வளவு போராடி இருக்கோம் அதைமீறி அதை அடைஞ்சும் இருக்கோம்னு நினைக்கும் போது ஒரு மாதிரி கஷ்டமாவும் இருக்கு ஒரு பக்கம் சந்தோஷமாவும் இருக்கு.

Representational Image

டி.வி. கூட இல்லாம ஒரு வீடு இருக்கா… விளையாட விடமாட்டாங்களானு ஆச்சரியப்படுற இந்த தலைமுறையினருக்கு இடையில… இப்படியெல்லாம் ஒரு சந்தோஷம் இருக்கானு தெரியாமலே வாழ்ற இந்த தலைமுறையினருக்கு மத்தியில் நம்ம எவ்வளவு பெரிய சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிச்சிட்டு வந்திருக்கோம்னு புரியும் போது… விஜய்சேதுபதி பேங்க் மேனேஜரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கூளிங் கிளாஸை போட்டுக் கொண்டு வெளியே வருவது போல… வாழ்க்கை எனக்கு முதல்முறையாக பேக்ரவுண்டில் கெத்தான ஒரு மியூசிக்கை போடுகிறது… “டேன் டன்… டேன் டேன் டன்… டேன் டேன் டன்.”

கோ.ராஜசேகர், தருமபுரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.