நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, மார்ச் 13-ம் தேதி மீண்டும் கூடியது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்தனர். சமீபத்தில் லண்டன் சென்ற ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், பிரிட்டிஷ் எம்.பி-க்கள் மத்தியிலும் உரையாற்றியிருந்தார்.

அப்போது, “இந்தியாவில் நாடாளுமன்றமும், ஊடகமும், நீதித்துறையும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினரை இரண்டம் தரக் குடிமக்களாக பிரதமர் மோடி நடத்துகிறார். ஸ்பைவேர் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., சீன ராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதி தரப்படுவதில்லை. வெறுப்பும் வன்முறையும்தான் பா.ஜ.க-வின் கொள்கைகள். ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச அமைப்பு” என்று ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தியின் பேச்சை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும் கண்டித்தனர். இந்த நிலையில்தான், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராகுல் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினர்.

இந்திய ஜனநாயகம் குறித்து முறையற்ற கருத்துக்களைப் பேசியவதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெளிநாட்டுப் பயணங்களின்போது இந்தியா குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்துக்களை பதாகைகளில் அச்சடித்து அவையில் காண்பித்தார்கள் காங்கிரஸ் எம்.பி-க்கள். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆளுங்கட்சி எம்.பி-க்களும் எதிர்க் கட்சி எம்.பி-க்களும் முழக்கங்களை எழுப்பியதால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க., ஆம் ஆத்மி, தேசிய மாநாடு கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ம.தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்பட 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமையல் எரிவாயு விலை உயர்வு, அதானி யின் பங்குச் சந்தை ஊழல், அரசுக்கு எதிராகப் போராடுவோர் மீதான சி.பி.ஐ., அமலாக்க த்துறை ரெய்டுகள் போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் கிளப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. மேலும், ‘அதானியின் ஊழல், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எதிர்க் கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவம் விவகாரத்தில் 16 கட்சிகளும் இணைந்து செயல்படுவது’ என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் விவாதத்திற்கு வருவதை ஆளும் தரப்பு விரும்பவில்லை. எனவே, லண்டன் பேச்சுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் தரப்பு கிளம்பியது. அதற்கு எதிராக எதிர்க் கட்சி எம்.பி-க்கள் முழக்கமிட்டனர். இதனால், இரு அவைகளும் இரண்டு நாட்களாக முடங்கின. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 16 கட்சிகளின் தலைவர்கள் விஜய் சௌக்கிலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை இன்று (மார்ச் 15) ஊர்வலமாகச் சென்றனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, பங்கு விலை மோசடி போன்ற நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது எதிர்க் கட்சிகளின் முக்கியமான கோரிக்கை. அதானி விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு இருக்கிறது என்பதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆகவே, நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கை எழுப்பப்படுவதை பா.ஜ.க விரும்பவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகளோ, அதானி விவகாரத்தை திசை திருப்பவே பாஜக ராகுல் காந்தி விவகாரத்தை கையில் எடுப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டும் அரசியலை கையில் எடுப்பதால், தொடர்ந்து இரு அவைகளும் முடக்கப்படுகிறது.