நாமக்கல்: வடமாநிலத் தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ! – டி.ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட போலீஸார் தீவிர விசாரணை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம், சரளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஆலைக்கு அருகிலேயே குடிசை அமைத்து தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், அந்த குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதே போல், ஜேடர்பாளையம் அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரும், தனது இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலையிலும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்கள். அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கும் மர்மநபர்கள் தீ வைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு குடிசைகளுக்கும் தீ வைக்கப்பட்டதால், வேலாயுதம்பாளையம் தீயணைத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குடிசைகளில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீ வைப்பு

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதேபோல், பாதுகாப்புக்காக போலீஸாரும் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். ஆனால், அந்தச் சம்பவத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த இந்தத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டு வெல்ல ஆலைகளில் பணிபுரிந்துவரும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடிசைகளில் தீ வைக்கப்பட்ட விவகாரத்துக்கும், இளம்பெண் கொலை சம்பந்தப்பட்ட விவகாரத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்திருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.