திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய திமுக எம்.பி.திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை, நேரு ஆதரவாளர்கள் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்கினர். இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு, திருச்சி சிவா எம்.பி.யின் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த நேரு ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டைதாக்கினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி சிவாஆதரவாளர்கள் 10 பேரை போலீஸார் கைது செய்து, செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இதை அறிந்த நேரு ஆதரவாளர்களான கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ், ஒன்றியக் குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் காவல் நிலையத்துக்குள் செல்ல முயற்சித்தனர்.
நாற்காலிகளால் தாக்குதல்: அங்கு பணியில் இருந்த காவலர் சாந்தி அவர்களை தடுத்தார். அவரை கீழே தள்ளிவிட்டு உள்ளே புகுந்தவர்கள், அங்கிருந்த நாற்காலிகளால் திருச்சி சிவா ஆதரவாளர்களை தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் திருச்சி சிவா ஆதரவாளரான சரவணன் காயமடைந்ததால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திமுகவினர் தள்ளிவிட்டதில், காவலர் சாந்திக்கும் கையில் காயம் ஏற்பட்டது.
தகவல் கிடைத்து வந்த காவல் துணைஆணையர் ஸ்ரீதேவி, அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தார். சிசிடிவிகாட்சிகளையும் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, திமுக கவுன்சிலர் புஷ்பராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதிக்கு வந்ததால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இதன்பிறகு, திருச்சி சிவா வீடு, அவரது ஆதரவாளர்கள் வைக்கப்பட்டிருந்த செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே, அமைச்சர் நேருவுடன் சென்றபோது திருச்சி சிவா ஆதரவாளர்கள் தங்களை தாக்கியதாகவும், இதில் கவுன்சிலர் காஜாமலை விஜய்யின் கார் சேதமடைந்ததாகவும் வட்ட செயலாளர் மூவேந்தன், செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
காவல் உதவி ஆய்வாளர் புகார்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி சிவா எம்.பி., பஹ்ரைன் சென்றுள்ள நிலையில், அவரது தரப்பில் இருந்து யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.
திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக உதவி ஆய்வாளர் மோகன் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 10 பிரிவுகளில் கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பொன்னகர் பகுதி பிரதிநிதி திருப்பதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் திருப்பதியை போலீஸார் கைது செய்தனர். காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் ஆகியோர் நேற்று மாலை கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்: இதற்கிடையே, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் திருச்சி மத்திய மாவட்ட திமுக கவுன்சிலர்கள் காஜாமலை விஜய் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முத்துசெல்வம் (மாவட்ட துணைச் செயலாளர்), ராமதாஸ் (வட்டச் செயலாளர்), அந்தநல்லூர் ஒன்றியக் குழு தலைவர் துரைராஜ் (மத்திய மாவட்டப் பொருளாளர்) ஆகிய 4 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்துள்ளார்.