உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில், இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மண்டல தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். மண்டல பொது செயலாளர்கள் ரவிச்சந்திரன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் மண்டல இணை செயலாளர் இளம்பரிதி அனைவரையும் வரவேற்றார். இந்த பிரசாரத்தில், போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான பற்றாக்குறையை ஈடுகட்ட பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை அமலாக்க வேண்டும்.
ஒப்பந்தபடி ஓய்வூதியத்தை முறைப்படுத்திட வேண்டும். ஓய்வுபெற்ற அன்றே பண பலன்களை வழங்கிட வேண்டும். தேவையான எண்ணிக்கையில் பேருந்துகளை வழித்தடங்களில் இயக்கிட வேண்டும். போக்குவரத்து பணிமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது. இந்த இருசக்கர வாகன பிரசாரத்தில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.