கர்நாடகா: மூன்று நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட பெங்களூரு – மைசூரு விரைவுசாலையின் சேதமடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை ரூ.8,480 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. பிரதான சாலை 6 வழியாகவும், மீதமுள்ள 4 வழி அதன் இருபுறமும் தலா 2 வழி என்ற அளவில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
118 கிலோ மீட்டர் தூரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையால் பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையை பிரதமர் மோடி அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில் மோடி திறந்து வைத்த இந்த சாலை வெறும் 3 நாளில் சேதமடைந்துள்ள புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இந்த பகுதியில் ஒரு லாரி கவிழ்ந்த நிலையில் அதே இடத்தில் தற்போது சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அவசரகதியில் இந்த சாலை திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டதாகவும், சிறு விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்திய சாலை (ஐஆர்சி) வகுத்துள்ள தரத்தின்படி நெடுஞ்சாலை அமைக்கப்படவில்லை என்றும் தரம் குறைந்த பொருட்களை வைத்து இந்த சாலை அமைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.