புதுச்சேரி: “விரைவில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைப்போம்”- முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீது இன்று உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, இளைஞர்களின் நலனையும் விளையாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கென தனிதுறை இந்தாண்டு துவக்கப்படும் எனவும், இதற்காக ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
image
இதைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில் பால்பண்ணை நடத்த விரும்பும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு கறவை மாடுகளை மானிய விலையில் வழங்குவதோடு சலுகை விலையில் பால் கொள்முதலையும் அரசே செய்யும். புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு இருப்பது தெரியும். நாடெங்கும் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தோல் தடிமன் நோய் பரவலின் காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் பாண்லே பாலின் விலை, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலின் விலையை காட்டிலும் குறைவாக இருப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா, “பெண்களுக்காக பிங்க் பேருந்துகளை இயக்குவதற்கான திட்டம் தயார் செய்து நிர்பயா திட்டத்தின் கீழ் 25 பேருந்துகள் வாங்க நிதியுதவி பெறுவதற்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பேருந்துகள் வாங்கி விரைவில் இயக்கப்படும்” என பேரவையில் உறுதியளித்தார்.
image
தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “மூடப்பட்ட ஏ.எப்.டி பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.85.38 கோடியும், அதே போல் பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நிலுவைத் தொகையான ரூ.51.33 கோடியும் பகுதி பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது” தெரிவித்தார்.
இதனையடுத்து பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம் மற்றும் நாகதியாகராஜன், “புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆட்சியில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறுகிறது, கட்டபஞ்சாயத்து அதிகரித்துள்ளது. மணல் கொள்ளை தாராளமாக நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது” என பரபரப்பு புகார் தெரிவித்தனர். இது குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.