மேலூர்: மேலூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள சாணிபட்டியில் உள்ளது மலத்தான் கண்மாய். இக்கண்மாயில் தற்போது முழங்கால் அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் முழுமையாக வற்றும் முன்பாக மீன்பிடி திருவிழா நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து இக்கண்மாயில் நேற்று கிராம மக்கள் திரளாக கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா நடைபெற்றது.
கண்மாய்க்கரையில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று காலை மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். பின் அவர்கள் அனைவரும் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடியை வீசியதும், ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, ஊத்தா மற்றும் கச்சா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இதில் கண்மாயில் இருந்த கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 1 கிலோ எடை உள்ள பெரிய மீன்கள் வரை அவர்களிடம் பிடிபட்டது. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.