பாட்னா: ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக பணியாற்றினார். அப்போது இந்திய ரயில்வேயில் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்நிலையில், லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் எம்.பி. மிசா பாரதி ஆகியோர் நேற்று ஆஜராயினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டு லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், ஜாமீன் வழங்கப்பட்டுள்ள அனைவரும் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.