புதுடில்லி, :அமெரிக்க டாலருக்கு போட்டியாக, இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவிலான வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கான கணக்குகளை துவங்க ஜெர்மனி, ரஷ்யா, இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச அளவிலான வர்த்தகத்தில், அமெரிக்க டாலரின் மதிப்பை குறைப்பதற்கான முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. டாலருக்கு மாற்றாக உள்ளூர் கரன்சியை பயன்படுத்தும்படி ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால், பல்வேறு நாடுகள் டாலர் பற்றாக்குறையால் தொடர் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
இவற்றில் சில நாடுகள், அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை வர்த்தகத்துக்காக பயன்படுத்த விருப்பம் தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே நம் அண்டை நாடான இலங்கை, இதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ராஜ்யசபாவில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் கிஷண் ராவ் காரத் பேசியதாவது:
சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கு, 18 நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த வங்கிகளுக்கு, சிறப்பு ‘வோஸ்த்ரோ’ கணக்குகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல், 60 ஒப்புதல்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குனர் ஜெனரல் கூறியதாவது:
சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 வங்கிகளும், நம் நாட்டைச் சேர்ந்த 30 வங்கிகளும் கையெழுத்திட்டுள்ளன. இது, சிறிய அளவிலான துவக்கம் தான்.
அடுத்த கட்டமாக இதில் மேலும் பல நாடுகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன பயன்?
இதன் வாயிலாக, சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக்குவதற்கான முயற்சி தீவிரமடையும்.
மேலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய்க்கான தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுஉள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையிலேயே ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கட்டணங்களை செலுத்த முடியும்.
இதை செயல்படுத்துவதற்காகவே, வெளிநாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கு, வோஸ்த்ரோ கணக்குகளை துவக்க அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.
இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யும் நடவடிக்கையில் மேலும் பல நாடுகள் இணையும் போது, இந்திய பொருளாதாரம் பலமானதாக மாறும்.
‘வோஸ்த்ரோ’ கணக்கு என்றால் என்ன?
வோஸ்த்ரோ என்றால் லத்தீன் மொழியில் உங்களுடையது என்று பொருள். வோஸ்த்ரோ கணக்கு என்றால், வெளிநாட்டு வங்கி ஒன்றின் பணத்தை உள்நாட்டு வங்கி தன் கணக்கில் வைத்துள்ளது என்பது பொருள். அதாவது, உங்களுடைய பணத்தை நாங்கள் வைத்துள்ளோம் என்பதை குறிக்கும் சொல் தான் வோஸ்த்ரோ.சர்வதேச வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்ளாமல், ரூபாயில் மேற்கொண்டால் நம் நாட்டுக்கு லாபகரமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள தயாராக இருக்கும் நாடுகளின் வங்கிகள், இங்குள்ள வங்கிகளில் கணக்கு துவங்கும். உதாரணமாக, சிங்கப்பூர் வங்கிகள் நம் நாட்டு வங்கிகளில் கணக்கு துவங்கியுள்ளன. இதன் வாயிலாக, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் முழுதும் இந்திய ரூபாயிலேயே தங்கள் பரிவர்த்தனையை முடித்துக் கொள்ளலாம்.
எந்தெந்த நாடுகளுக்கு அனுமதி
போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், பிரிட்டன், கென்யா, மலேஷியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு, இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்